வேகமாகப் பரவும் ஷிகெல்லா தொற்று! தற்காத்துக் கொள்வது எப்படி?

Wait 5 sec.

கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அது எப்படி பரவுகிறது? தொடரிலிருந்து தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?கேரளத்தில் ஜூன் மாதத்தில் மட்டும் ஷிகெல்லா பாக்டீரியா தொற்றால் 6 பேர் இறந்துள்ளனர், 165 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்தாண்டு முழுவதும் 240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாநிலம் முழுவதும் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.ஷிகெல்லா என்பது என்ன? ஷிகெல்லா அல்லது ஷிகெல்லோசிஸ் (Shigella or shigellosis) என்பது மனித உடலில் முதன்மையாக குடல்களைப் பாதிக்கக்கூடிய பாக்டீரியா தொற்று. செரிமான மண்டலத்தை முழுவதும் பாதிக்கக் கூடியது. ஷிகெல்லா சோனி, ஷிகெல்லா ஃப்ளெக்ஸ்னெரி, ஷிகெல்லா பாய்டி, ஷிகெல்லா டைசென்டேரியே ஆகிய நான்கு சிற்றினங்களைக் கொண்ட ஒரு பாக்டீரியா.இதில் டைசென்டேரியே மிகவும் கடுமையானது. உயிருக்கு ஆபத்தான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு நச்சுப்பொருளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. அறிகுறிகள் இதன் முதல் அறிகுறி கடுமையான வயிற்றுப்போக்கு, ரத்தத்துடன் மலம் வெளிவரலாம், நீண்ட நாள்களுக்கு வயிற்றுப்போக்கு இருக்கும். காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி போன்றவை இதர அறிகுறிகளாகும். குடலில் மலம் இல்லையென்றாலும் மலம் கழிக்க வேண்டிய உணர்வு இருக்கும். உடல் எடை குறைவது, நீரிழப்பு, அதிக காய்ச்சல், ரத்தத்துடன் மலம் என அறிகுறிகள் தீவிரமாக இருந்தால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். ஷிகெல்லா பாக்டீரியா தொற்று ஏற்பட்டு ஒரு வாரத்தில் பெரும்பாலும் குணமாகிவிடும். இதற்கு நோயெதிர்ப்பு மருந்துகள் மூலமாக சிகிச்சையளிக்கப்படுகிறது. தீவிர அறிகுறிகள் இருந்தால் மரணம் ஏற்படும். எப்படி பரவுகிறது? இந்தத் தொற்று பெரும்பாலும் அசுத்தமான குடிநீர் - உணவு மூலம் பரவுகிறது. அதேபோல தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கும் பரவுகிறது. குறிப்பாக ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மலம் வழியாகப் பரவுகிறது. மலத்தில் உள்ள பாக்டீரியாக்கள் கைகளில் இருந்தால், மற்ற பொருள்களைத் தொடும்போது அதில் படிகிறது. அதனை மற்றொருவர் தொடும்போதும் அவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. கழிவுகளில் உட்காரும் ஈக்கள், பின்னர் நாம் உண்ணும் உணவுகளில் வந்து அமரும்போதும் பாதிப்பு ஏற்படுகின்றன. பெரும்பாலான குடல் நோய்க்கிருமிகள், நோய்த்தொற்றை ஏற்படுத்த ஆயிரம் முதல் நூறாயிரக்கணக்கான நுண்ணுயிரிகள் தேவைப்படுகின்றன. ஷிகெல்லாவிற்கு தொற்றை ஏற்படுத்த, 10 நுண்ணுயிரிகள் என்ற மிகக் குறைந்த எண்ணிக்கையே போதுமானது. யாருக்கு பாதிப்பு? 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இருப்பினும் எந்த வயதினருக்கும் ஏற்படலாம். நோய் தொற்றுள்ள பகுதிகளுக்குப் பயணம் செய்பவர்கள், தொற்றுள்ளோரிடம் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள்,நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். தற்காத்துக்கொள்வது எப்படி?பாதிப்பு உள்ள இடங்களில் வசிக்கும்போது கைகளைச் சுத்தமாக கழுவ வேண்டும். குறிப்பாக கழிவறை சென்றுவந்த பிறகு கைகளைக் கழுவுவது அவசியம். சானிடைசர் பயன்படுத்தலாம் அல்லது சோப்பு கொண்டு சுமார் 20 வினாடிகளாவது கைகளை நன்றாகத் தேய்த்து கழுவ வேண்டும். குழந்தைகளுக்கு டயப்பர்களை மாற்றிய பிறகும் கைகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். டயப்பர்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். கழிவறைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குளங்கள், ஏரிகள், நீச்சல் குளங்களில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். அவற்றில் உள்ள தண்ணீரையும் அருந்த வேண்டாம். கைகளைக் கொண்டு வாயை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் பயன்படுத்தும் விளையாட்டுப் பொருள்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல பள்ளிகளிலும் தொற்று பரவலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக தொற்றுள்ளவரின் கைகளில் இருந்து உங்கள் கைகளில் பரவி பின்னர் உங்கள் வாய் மூலமாக உடலில் பரவுகிறது. சுத்தமான தண்ணீர், உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கூட்டமான இடங்களுக்குச் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொற்று உள்ளோருடன் பாலியல் உறவு கொண்டாலும் தொற்று பரவும். மருந்துகள் ஆம்பிசிலின், டிரிமெத்தோபிரிம் - சல்ஃபாமெத்தாசோல், ஃபுளோரோகுயினோலோன்கள், அசித்ரோமைசின் ஆகிய நோயெதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது உரிமம் பெற்ற தடுப்பூசி எதுவும் இல்லை. இருப்பினும் பல தடுப்பூசிகள் மருத்துவப் பரிசோதனைகளில் உள்ளன. தடுப்பு நடவடிக்கைகளே தீவிரமாக பின்பற்றப்படுகிறது. Shigella infection rise in Kerala; How does it spread, How can you protect yourselfஹோட்டல் மட்டுமல்ல! வீடுகளில் சமைக்கும் உணவிலும் ஆபத்து! உணவு நஞ்சாவது எப்படி?