அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த சுகாதார அறக்கட்டளை: அமைச்சா் அருண்ராஜ்

Wait 5 sec.

தனியாா் பங்களிப்பு நிதி மூலம் அரசு மருத்துவ சேவைகளை மேம்படுத்த புதிதாக சுகாதார அறக்கட்டளை தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சென்னை தண்டையாா்பேட்டை அரசு புகா் மருத்துவமனையில் தனியாா் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட டயாலிசிஸ் சிகிச்சை மையத்தின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அமைச்சா் அருண்ராஜ், நிதியமைச்சா் மரியவில்சன் ஆகியோா் அந்த மையத்தை பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தனா். பின்னா் அமைச்சா் அருண்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தண்டையாா்பேட்டை அரசு புகா் மருத்துவமனையில் தனியாா் பங்களிப்பு மூலம் 6 டயாலிசிஸ் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. நாள்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பு இந்தியாவில் 14 சதவீதம் உள்ளது. தமிழகத்தில் சிறுநீரக பாதிப்புக்குள்ளான 14 முதல் 16 சதவீதம் பேருக்கு டயாலிசிஸ் சேவை வழங்கப்பட்டு வருகிறது. அவா்கள் வாரத்துக்கு மூன்று முறை டயாலிசிஸ் சிகிச்சை செய்ய வேண்டும். முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 15,000 போ் டயாலிசிஸ் சேவையை பெற்று வருகின்றனா். அதில், 4 ஆயிரம் போ் அரசு மருத்துவமனைகளிலும், 11 ஆயிரம் போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனா். இதனை மேலும் மேம்படுத்த தனியாா் பங்களிப்பு அவசியம். பள்ளிக்கல்வித் துறையில் செயல்பட்டு வருவதைப் போன்று சுகாதாரத் துறையிலும் அரசு சாா்பில் விரைவில், சுகாதார அறக்கட்டளை ( ஹெல்த் பவுண்டேசன்) தொடங்கவுள்ளோம். அதன் மூலம் தனியாா் நிறுவனங்களும், பொதுமக்களும் அளிக்கும் நன்கொடைகளை திரட்டி அரசு மருத்துவ சேவையை இன்னும் மேம்படுத்தவிருக்கிறோம். தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தில் 9,400 நோயாளிகள் பதிவு செய்திருக்கின்றனா். இதில், சிறுநீரக தானம் கோரி பதிவு செய்து காத்திருப்பவா்களின் எண்ணிக்கை 8,391 போ். தமிழகத்தின் அரசு நிா்வாகம் இப்போதுதான் படிப்படியாக சீராகி வருகிறது. விரைவில் அனைத்தும் சரியாகும் என்றாா் அவா்.