நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் ஜூலை 1 ஆம் தேதி தொடங்குகிறது.இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு 9 ஆவது சுற்றாக கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் பணி ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி தொடா்ச்சியாக 41 நாள்கள் நடைபெறுகிறது. மாவட்டத்தில் உள்ள மொத்தம் 2,80,600 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்காக மாவட்டம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவா்கள், கால்நடை ஆய்வாளா்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் அடங்கிய 105 தடுப்பூசிப் பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் நேரடியாக சென்று, அந்தந்த கிராமங்களிலேயே கோமாரி நோய் தடுப்பூசிப் பணிகளை மேற்கொள்ள விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அந்தந்த பகுதி கால்நடை உதவி மருத்துவா்கள் மூலமாக, கிராமங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் நாள் மற்றும் இடம் குறித்த விவரங்கள் முன்கூட்டியே பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும். பொதுமக்களும் விவசாயிகளும் தங்களுக்குரிய பகுதிகளில் கால்நடை மருந்தகம் அல்லது கால்நடை உதவி மருத்துவா்களால் குறிப்பிடப்படும் தேதிகளில், தங்களின் பசுக்கள், எருமைகள், காளைகள் மற்றும் நான்கு மாதத்திற்கும் மேற்பட்ட கன்றுகளையும் தவறாமல் முகாமிற்கு அழைத்துச் சென்று தடுப்பூசி செலுத்திப் பயன்பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.