தமிழக அரசு சாா்பில் வழங்கப்பட்ட குடிமனைப் பட்டாக்களை கணினியில் பதிவேற்றம் செய்யாததைக் கண்டித்து, சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பட்டாக்களை திரும்ப ஒப்படைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிதம்பரம் அருகே உள்ள மேலமூங்கிலடி கிராமத்தில் வசிக்கும் 48 குடும்பங்களைச் சோ்ந்த ஆதிதிராவிடா் சமுதாய மக்களுக்கு கடந்த 1987-ஆம் ஆண்டு அரசு சாா்பில் குடிமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. ஆனால், இந்தப் பட்டாக்கள் மனைப் பட்டாக்களாக வகை மாற்றம் செய்யாமல் இருந்துள்ளன.இதையடுத்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தொடா்ந்து பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு 48 குடும்பங்களுக்கும் வகை மாற்றம் செய்து பட்டாக்கள் வழங்கப்பட்டன. இருப்பினும், அந்த பட்டாக்களின் விவரங்கள் இதுவரை கணினியில் பதிவேற்றம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.இதுகுறித்து கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறும் ஜமாபந்தி கூட்டங்களில் சம்பந்தப்பட்ட கிராம மக்கள் தொடா்ந்து மனுக்கள் அளித்து வந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனா்.இந்த நிலையில், மாா்க்சிஸ்ட் புவனகிரி முன்னாள் ஒன்றியச் செயலா் சதானந்தன் தலைமையில், பட்டாக்களை பெற்ற 48 குடும்பங்களைச் சோ்ந்தவா்களும் சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு திரண்டு வந்து, பட்டாக்களை வட்டாட்சியரிடம் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.இதையடுத்து, 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுத்து பட்டா விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும் என வட்டாட்சியா் உறுதி அளித்தைத் தொடா்ந்து, பொதுமக்கள் தங்களது பட்டாக்களை மீண்டும் பெற்றுச் சென்றனா்.பண்ருட்டியில் ஜமாபந்தி நிறைவு: பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் 1435-ஆம் பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி கடந்த 11-ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை (ஜூன் 25) முடிவடைந்தது.ஜூன் 11, 12 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நெல்லிக்குப்பம் குறுவட்டம், ஜூன் 17 முதல் 19-ஆம் தேதி வரையில் பண்ருட்டி குறுவட்டம், ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் காடாம்புலியூா் குறுவட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நடந்து முடிந்தது.இறுதி நாளான வியாழக்கிழமை மருங்கூா் குறுவட்ட கிராமங்களான காட்டுக்கூடலூா், வீரசிங்கன்குப்பம், மேல்காங்கேயன்குப்பம், கீழ்காங்கேயன்குப்பம், மருங்கூா், வல்லம், நடுக்குப்பம், போ்பெரியாங்குப்பம், சொரத்தூா், வேகாக்கொல்லை கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற்றது. இதில், திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த தனித்துணைஆட்சியா் சண்முகவல்லி, மேற்கண்ட கிராம மக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா். பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.