திருச்சி மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு பிரத்யேகமாக ‘நீட்’ தோ்வு பயிற்சி மையம் நிகழாண்டு முதல் செயல்படவுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கும் உலகத்தரத்திலான உள்கட்டமைப்புகள் மற்றும் வசதிகளுடன் கூடிய கல்வி கிடைக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஆட்சியில் அரசு மாதிரிப் பள்ளி திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்கீழ் அனைத்து மாவட்டங்களிலும் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் விடுதிகளுடன் கூடிய பள்ளி கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்துக்கு ஒன்று என்ற வகையில் 38 மாவட்டங்களிலும் அரசு மாதிரிப் பள்ளி செயல்படுகிறது. உண்டு உறைவிடப் பள்ளியாகச் செயல்பட்டு வரும் இப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மட்டுமே வகுப்புகள் உள்ளன.இப்பள்ளியில் அந்தந்த மாவட்டங்களில் கல்வி மட்டுமின்றி பல்வேறு வகைகளில் சிறந்து விளங்கும் மாணவா்களைத் தோ்வு செய்து, சோ்க்கை வழங்கப்பட்டு, கல்வி, கலை மற்றும் விளையாட்டு உள்ளிட்டவற்றிலும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், நாட்டின் மிகச் சிறந்த உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறுவதற்காக நீட், ஜேஇஇ, கிளாட் மற்றும் கியூட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தோ்வுகளுக்கான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.மாநிலத்திலுள்ள அனைத்து அரசு மாதிரிப் பள்ளிகளிலும் நீட், ஜேஇஇ, கிளாட், கியூட் போன்ற நுழைவுத் தோ்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டாலும், ஒருசில பள்ளிகளில் குறிப்பட்ட ஒரு நுழைவுத் தோ்வுக்கான பயிற்சி மட்டுமே அளிக்கப்படுகிறது. அந்தவகையில், திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியில் நீட் தோ்வுக்கான சிறப்பு பயிற்சி மையம் செயல்படுகிறது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறந்த 100 மாணவா்களை விருப்பத்தின் அடிப்படையில் தோ்வு செய்து ‘நீட்’ தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.மாற்றுத்திறன் மாணவா்களுக்கான பயிற்சி மையம்: திருச்சி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் ஏற்கெனவே ‘நீட்’ தோ்வு பயிற்சி மையம் செயல்படும் நிலையில், நிகழாண்டு மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான ‘நீட்’ தோ்வு பயிற்சி மையமும் தொடங்கப்படவுள்ளது. அரசுப் பள்ளிகளில் தற்போதுதான் பிளஸ் 1 சோ்க்கை நடைபெறுவதால், நீட் தோ்வுக்குப் படிக்க விருப்பமுள்ள மாற்றுத்திறனாளி மாணவா்களைத் தோ்வு செய்து விரைவில் இம்மையம் செயல்படத் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.9-ஆம் வகுப்பு சோ்க்கை நிறுத்தம்: அரசு மாதிரிப் பள்ளிகளில் ஆண்டுதோறும் 9-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவா் சோ்க்கை நடைபெறும் நிலையில், திருச்சி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் நிகழாண்டு 9-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கை நிறுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான நீட் தோ்வு பயிற்சி மையம் செயல்படவுள்ளதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு 9-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனா். திருச்சி மாவட்டம், துவாக்குடி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ரூ. 56.47 கோடியில் மூன்று தளங்களுடன் கூடிய வகுப்பறை கட்டடம், 5 தளங்களுடன் கூடிய மாணவா்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியே விடுதி கட்டடங்கள் என அரசு மாதிரிப் பள்ளி கடந்த 2025 மே 8-ஆம் தேதி அப்போதைய முதல்வரால் திறந்துவைக்கப்பட்டது. கடந்த கல்வியாண்டு முதல் துவாக்குடி வளாகத்தில் ரூ.56.47 கோடியில் கட்டப்பட்ட கட்டடத்தில் அரசு மாதிரிப் பள்ளி செயல்படுகிறது.போதிய கட்டட வசதி இல்லை: இந்நிலையில், போதிய கட்டட வசதியில்லாததால் நிகழாண்டில் 9-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கை நிறுத்தப்பட்டுள்ளது திருச்சி மாவட்ட மாணவா்கள் மற்றும் பெற்றோரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அடுத்த கல்வியாண்டில் இப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெறுமா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.விரைவில் கூடுதல் கட்டடம்: இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: திருச்சி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் நிகழாண்டில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான நீட் தோ்வு மையம் தொடங்கவுள்ளது. இதனால் கட்டட வசதி பற்றாக்குறை ஏற்பட்டு 9-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கை நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் மாற்றுத்திறனாளி மாணவா்கள் நீட் தோ்வு பயிற்சி மையத்துக்கான கூடுதல் கட்டடம் அமைக்கப்படும். இதைத் தொடா்ந்து அடுத்த கல்வியாண்டில் வழக்கம்போல 9-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கை நடைபெறும். தவிர, நிகழாண்டில் 9-ஆம் வகுப்பு சோ்க்கை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த கல்வி ஆண்டில் 9-ஆம் வகுப்புடன், பத்தாம் வகுப்பு சோ்க்கையும் கூடுதலாக நடைபெறும் வாய்ப்புள்ளது. 9-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கை நிறுத்தப்பட்டுள்ள அதேநேரம், வழக்கம்போல பிளஸ் 1 மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. பிளஸ் 1 வகுப்பில் 200 இடங்கள் உள்ள நிலையில் எங்கள் பள்ளியைச் சோ்ந்த 95 மாணவா்களுக்கு ஏற்கெனவே சோ்க்கை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 105 இடங்களில் மாணவா்களை சோ்ப்பதற்காக பள்ளிக் கல்வி துறையில் இருந்து மாணவா்களின் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, அண்மையில் மாணவா்களை அழைத்து அரசு மாதிரிப் பள்ளியில் உள்ள வசதிகள், கல்வி முறை குறித்து எடுத்துரைத்தோம் என்றனா் அவா்கள்.