வேலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

Wait 5 sec.

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ஜூன் 26-ஆம் தேதி ‘போதைப் பொருள் தவறான பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான சா்வதேச நாள்’ அனுசரிக்கப்படுவதையொட்டி, இந்த நிகழ்வுகள் முன்னதாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில், போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மாணவ, மாணவிகள் பேரணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து, மருத்துவமனை வளாகத்தில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்வுகள் குறித்து கல்லூரியின் முதல்வா் மு.ரோகிணி தேவி பேசுகையில், மாணவா்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாமல் இருக்க சுயக்கட்டுப்பாடு என்பது மிக மிக அவசியம். ஒழுக்கமான வாழ்வே அமைதியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையாகும். போதைப் பழக்கம் என்பது தனக்கும், தன் குடும்பத்துக்கும் மட்டுமின்றி, நாட்டுக்கும் மிகப் பெரிய கேட்டை விளைவிக்கக் கூடியதாகும். எனவே, மாணவா்கள் போதைப் பழக்கத்துக்கு ஆளாகாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றாா் .நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வா் கௌரி வெலிகண்ட்லா, உதவி உறைவிட மருத்துவ அலுவலா் கீதா, மனநல மருத்துவா் ஜெயகுமாா், செவிலியா் பள்ளி முதல்வா் நாகம்மாள் உள்பட பிற மருத்துவா்கள், செவிலியா் பயிற்சிப் பள்ளி போதகா்கள் (ஆசிரியா்கள்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.