நிதி முறைகேடு தொடர்பான பணமோசடி விசாரணையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்விச் சங்க அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட சோதனையில் ரொக்கப்பணம், தங்க நகைகள் பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்தது. ஸ்ரீ ஆஸ்தா கல்வி அறக்கட்டளைச் சங்கம் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக ஜூன் 23 அன்று இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய முகமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சௌக்ஸி குழுமத்துடன் தொடர்புடைய குடியிருப்பு வளாகங்கள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட கல்விச் சங்கத்திற்குச் சொந்தமான நிதியை முறைகேடு செய்தது மற்றும் வேறு நோக்கங்களுக்கு மாற்றியது உள்ளிட்ட பெரிய அளவிலான நிதி மோசடி தொடர்பாக, மாநிலக் காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு ஜெயநாராயண் சௌக்ஸி மற்றும் பிறர் மீது பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை இந்த வழக்கைப்பதிவு செய்துள்ளது.