சென்னையில் புது வீடு வாங்கிக் குடியேறி இருக்கிறார், நடிகர் தங்கதுரை.விஜய் டிவியின் 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தங்கதுரை. டிவியிலிருந்து சினிமா பக்கமும் வந்தவர் 'டிடி ரிட்டர்ன்ஸ்', 'பன்னிக்குட்டி' உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருந்தார். மேலும் சில படங்கள் கைவசம் இருப்பதாகவும் தெரிகிறது.தற்போது சென்னையில் சொந்தமாக வீடு வாங்கி அண்மையில் கிரஹப் பிரவேசம் நடத்தியிருக்கிறார். நடிகர்கள் விஜய் சேதுபதி, செந்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அமைச்சர்கள் ராஜ்மோகன், ஸ்ரீநாத் உள்ளிட்ட பிரபலங்கள் இந்தப் புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்டனர்.'மூணு பெட்ரூம் வீடு. நீச்சல் குளம், லைப்ரரி, விளையாட கிரவுண்டு என எல்லா வசதியும் இருக்கிற வீடு. எனக்குக் கிடைக்காத வசதி வாய்ப்புகள் என் பிள்ளைக்குக் கிடைச்சிருக்குங்கிறதுல சந்தோஷமா இருக்கு. அதேபோல சொந்தக்காரங்க எல்லாரையும் ஃபங்ஷனுக்குக் கூப்பிட்டேன். சிலர் கண் பட்டுடும்னு கிரஹப் பிரவேசத்தை கிராண்டா செய்ய வேண்டாம்னு சொல்வாங்க. என்னால இதை ஏத்துக்க முடியலை. என் சொந்த பந்தம், அண்ணன், தம்பி, பங்காளிங்க எல்லாமே ஒண்ணுமண்ணாவே கஷ்டப்பட்டுட்டுதான் இருந்தோம். அதுல ஓரளவு வசதி வந்த நான் புதுசா ஒரு வீட்டை வாங்கிக் குடியேறுகிறப்ப அவங்களுக்கும் அது ஓர் உத்வேகத்தைத் தருமில்லையா? நாம நல்லவிதமா யோசிச்சா நமக்கும் நல்லதுதான் நடக்கும்னு உறுதியா நம்புறேன்'' என நெகிழ்ச்சியுடன் முடித்தார்.