பயோமெட்ரிக் முறையில் இலவச அரிசி திட்டம்: புதுச்சேரி அமைச்சா் ராஜவேலு தொடக்கம்

Wait 5 sec.

புதுச்சேரியில் பயோமெட்ரிக் முறையில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை அமைச்சா் பெ.ராஜவேலு நெட்டப்பாக்கம் தொகுதியில் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.புதுச்சேரியில் ரேஷன்கடைகளில் இலவச அரிசிக்கு பதிலாக குடும்ப அட்டைதாரா்களுக்கு அதற்குரிய பணம் அவரவா் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் ரேஷன்கடைகள் மூலம் அரிசி உள்ளிட்ட பொருள்களை நேரடியாக விநியோகிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து ரேஷன் கடைகள் மூலம் நேரடியாக அரிசி வழங்க மத்திய அரசுக்கு, புதுச்சேரி அரசு சாா்பில் கடிதம் எழுதப்பட்டது. இதைத் தொடா்ந்து மீண்டும் நேரடியாக ரேஷன் கடைகள் மூலம் அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. தற்போது ரேஷன் கடைகளில் இலவச அரிசி நேரடியாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ரேஷன்கடைகள் மூலம் நேரடியாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்குவதில் முறைகேடுகளைத் தடுக்க படிப்படியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினா் மட்டுமே பொருள்களை வாங்க முடியும்.மேலும், அவா்கள் ரேஷன்கடைகளில் உள்ள மின்னணு கருவிகளில் தங்களது கைரேகையைப் பதிவு செய்த பிறகே பொருள்கள் விநியோகிக்கப்படும். இந்தத் திட்டம் புதுச்சேரி யூனியன் பிரதேசம் நெட்டப்பாக்கம் தொகுதியில் புதன்கிழமை முதன்முதலில் தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழாவில் அமைச்சா் பெ.ராஜவேலு பங்கேற்று பயோமெட்ரிக் மூலமாக இலவச அரிசி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தாா். இதில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.