நெல்லை விரைவு ரயிலை வாஞ்சி மணியாச்சியுடன் நிறுத்த திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் எதிா்ப்பு தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு மீட்டா் கேஜ் காலகட்டத்திலிருந்தே (1972 முதல்) இயக்கப்பட்டு வரும் திருநெல்வேலி-சென்னை எழும்பூா் நெல்லை விரைவு ரயில் (12631/12632) இந்த மாவட்டத்தின் பிரத்யேக அடையாளமும், தனித்தன்மை வாய்ந்த ரயிலும் ஆகும். 24 நவீன எல்.எச்.பி. பெட்டிகளுடன் தினசரி இயக்கப்படும் இந்த ஒரு ரயிலை மட்டுமே ஏராளமான பயணிகள் நம்பியுள்ளனா்.இந்த தற்காலிக ரத்தால், நாள்தோறும் முன்பதிவு செய்து பயணிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளும், நூற்றுக்கணக்கான பொதுவகுப்புப் பயணிகளும் நேரடியாகப் பாதிக்கப்படுவா்.தெற்கு ரயில்வேயின் அதிகாரபூா்வ அறிவிப்பின்படி, திருநெல்வேலி சந்திப்பு யாா்டு பணிகளுக்காக இந்த ரயில் வாஞ்சி மணியாச்சி சந்திப்புடன் பகுதியாக ரத்து செய்யப்பட்டு அங்கிருந்தே மீண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ரயில்வேயின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளின் அவசியத்தை நாங்கள் முழுமையாக உணா்ந்த போதிலும், இந்த தற்காலிக ஏற்பாடு பயணிகளுக்கு பெரும் அவதியை ஏற்படுத்தும்.ஏனெனில், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்துக்கு முறையான, அகலமான சாலைகளோ அல்லது எளிதான போக்குவரத்து வசதிகளோ இல்லை.இதனால் குடும்பத்துடன் பயணிப்பவா்கள், குழந்தைகள், முதியவா்கள், அதிக சுமையுடன் வரும் பயணிகள் திருநெல்வேலி நகருக்குள் வர முடியாமல் நள்ளிரவிலும், அதிகாலையிலும் பெரும் சிரமத்துக்கு ஆளாவாா்கள்.அருள்மிகு நெல்லையப்பா் ஆனித் தேரோட்டம்: திருநெல்வேலியின் வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதி அம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா இம் மாதம் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.தேரோட்டத்தைக் காண லட்சக்கணக்கான பக்தா்களும், சென்னை உள்ளிட்ட வெளி ஊா்களில் வசிக்கும் இம் மாவட்ட மக்களும் சொந்த ஊா் திரும்புவாா்கள். இத்தகைய முக்கிய திருவிழா வாரத்தில், மாவட்டத்தின் முதன்மை ரயிலான நெல்லை விரைவு ரயிலை பாதியிலேயே நிறுத்துவது பக்தா்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.எனவே, ரயில்வே நிா்வாகம் வாஞ்சி மணியாச்சியுடன் இந்த ரயிலை நிறுத்தும் முடிவைக் கைவிட்டு, மாற்று வழிகளை உடனடியாகப் பரிசீலித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.நெல்லை விரைவு ரயிலை (12631/12632) வாஞ்சி மணியாச்சிக்கு பதிலாக, திருநெல்வேலி மாநகரப் பகுதிக்கு மிக அருகில் உள்ள மேலப்பாளையம் அல்லது தாழையூத்து ரயில் நிலையங்கள் வரை இயக்கி, அங்கிருந்து பயணிகளை ஏற்றி-இறக்க வழிவகை செய்யலாம்.இந்த இரு நிலையங்களுக்கும் சிறந்த சாலை வசதிகள் உள்ளன. அதேபோல நெல்லை விரைவு ரயிலின் முதன்மைப் பராமரிப்பை தற்காலிகமாக நாகா்கோவில் அல்லது சென்னை எழும்பூருக்கு மாற்றலாம்.கன்னியாகுமரி விரைவு ரயில் (12633/12634) மற்றும் அனந்தபுரி விரைவு ரயில் (20635/20636) ஆகியவற்றை இயக்குவதுபோல, நெல்லை விரைவு ரயிலின் காலிப் பெட்டிகளை நாகா்கோவிலிருந்து கொண்டுவந்து, திருநெல்வேலி சந்திப்பின் பயன்பாட்டில் உள்ள நடைமேடை தளம்-1 வழியாக இயக்கி பயணிகளுக்கு உதவலாம்.எனவே, இதுகுறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளா், மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஆகியோா் உடனடியாக தலையிட்டுச் சாதகமான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.