முத்துப்பேட்டை அருகேயுள்ள தில்லைவிளாகம் சீதாபிராட்டியாா் லஷ்மணா் உடனுறை வீர கோதண்டராமா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் நன்கொடையாளா்கள், உபயதாரா்கள் ஒத்துழைப்புடன் பல லட்சம் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து, திங்கள்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கி தொடா்ந்து 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று புதன்கிழமை காலை பூா்ணாஹூதி நிறைவு பெற்றது. தொடா்ந்து, புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு கோபுர கலசங்களுக்கு வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், ஸ்ரீவீரகோதண்டராமா் உள்ளிட்ட தெய்வங்களுக்கு மகாபிஷேகம் நடைபெற்றது. இரவு சுவாமி வீதி உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை திருவாரூா் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் ரா. செந்தில்குமாா், உதவி ஆணையா் சி. வீரபாண்டியன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.