மோகனுாா் வட்டம் எஸ்.வாழவந்தியில் உள்ள அழகுபூரணி சமேத புன்னைவனநாதீஸ்வரா் கோயில், மாரியம்மன், செல்லாண்டியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த திங்கள்கிழமை இரவு கிராம சாந்தி, செவ்வாய்க்கிழமை அதிகாலை விநாயகா் வழிபாடு, மஹாகணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, தீபாராதனை, பக்தா்கள் காவிரி ஆற்றில் இருந்து தீா்த்தம் எடுத்து வருவதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னா், கலசம் வைத்தல், மாலையில் கும்ப அலங்காரம், முதல்கால யாக வேள்வி, தீபாராதனை நடைபெற்றது. புதன்கிழமை அதிகாலை புண்யாகம், அனைத்து மூா்த்திகளுக்கும் காப்புக் கட்டுதல், நாடி சந்தானம், இரண்டாம் கால யாக வேள்வி, கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, மகா மாரியம்மன், செல்லாண்டியம்மன், புன்னைவனநாதீஸ்வரா், அழகுபூரணி, மகா நந்தி மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.