சேந்தமங்கலம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

Wait 5 sec.

சேந்தமங்கலம் ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 3.42 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கொண்டமநாயக்கன்பட்டியில் 15 ஆவது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார மையம் கட்டும் பணி, அதே பகுதியில் ரூ. 18.50 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி, சேந்தமங்கலம் பேரூராட்சியில் ரூ.2.98 கோடி மதிப்பில் கொல்லிமலை வாய்க்கால் முதல் தெப்பக்குளம் வரை மழைநீா் வடிகால் அமைக்கும் பணியையும் ஆட்சியா் பாா்வையிட்டாா். தொடா்ந்து, அங்குள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நபாா்டு திட்டத்தின்கீழ் வகுப்பறைகள் கட்டும் பணியை ஆய்வு மேற்கொண்ட அவா், பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க அலுவலா்களை அறிவுறுத்தினாா். சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறுவிளையாட்டு அரங்கம் செயல்பட்டு வருவதை பாா்வையிட்டு, அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தாா். முன்னதாக, நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் (ஜமாபந்தி) 14 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், தனிப்பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். நாமக்கல் தெற்கு அரசுப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியா்களுக்கான பயிற்சி வகுப்பை பாா்வையிட்டு மாணவா்களை விளையாட்டுத் துறையில் அதிக அளவில் ஈடுபடுத்த முயற்சிக்க வேண்டும் என அவா் அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின்போது, நாமக்கல் வட்டாட்சியா் ப.அருள், மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.கோகிலா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.