சங்க அகமரபில் தோழி-முனைவர் இரா. இளவரசு; பக். 136; ரூ. 150; இலக்கியா பதிப்பகம், தமிழூர்-627 808, ✆ 99407 70433.செவிலியின் மகள் எனச் சுட்டப்பெறும் தோழி, தலைவிக்கான நன்மை, தீமைகளை அறிந்து உதவி செய்பவராக, அவருக்கு உற்ற துணையாக விளங்குபவர். தோழி குறித்த பதிவுகள் தொல்காப்பியம் தொடங்கி தோற்றம் பெற்ற அனைத்து அக இலக்கண நூல்களிலும் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், எட்டுத்தொகை அகநூல்களில் இடம்பெற்றுள்ள தோழியின் செயல்பாடுகளை நூலாசிரியர் இந்த நூலில் தொகுத்துள்ளார்.களவொழுக்க காலத்தில் மதி நுட்பத்துடன் செயல்பட்டு தலைவன், தலைவியை இல்லற வாழ்வுக்கு எவ்வாறு கொண்டு வருகிறார் தோழி என்பதை சங்க அக இலக்கியங்கள் வழியாக ஆராய்ந்து வெளிப்படுத்துகிறார் நூலாசிரியர். உடன்போக்கு, அதனால் வழியில் ஏற்படும் இன்னல்கள் குறித்த தோழியின் கருத்துகள் சிந்தனைக்குரியவை.தலைவி திருமணமாகிச் சென்றதும், அவளது பிரிவால் தவிக்கிறாள் தோழி. தனது பெற்றோரைச் சந்திக்க வந்த தலைவியிடம், நான் செல்லும் இடங்களில் உன் நினைவுகள் நிறைந்திருக்கின்றன என்று தோழி கூறுவதாக ஐங்குறுநூற்றுப் பாடல் வழியாக அந்தக் காட்சி விவரிக்கப்பட்டுள்ள பாங்கு ரசிக்கத்தக்கது.திருமணத்துக்குப் பின்பும் பொருள்வயிற் தலைவன் பிரியும் போதும், அவன் செல்லும் பகுதியிலுள்ள இடர்ப்பாடுகளை எடுத்துரைப்பதும், திரும்பி வரும் வரை தலைவியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை தோழியிடம் தலைவன் அளிப்பது என அனைத்து நிலைகளிலும் தோழியின் முக்கியத்துவம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. மதிநுட்பம் மிகுந்த தோழி, தலைவி மீது கொண்ட குறைவற்ற அன்பால் தலைவனை நெறிப்படுத்தும் போது வெளிப்படும் உலகியல் அறிவும் சங்க அகப்பாடல்கள் வாயிலாக தெரியவருகிறது.சங்கப் புலவர்களின் ஒட்டுமொத்த அறிவுச் சுரங்கமாக தோழி பாத்திரப் படைப்பு திகழ்கிறது என்றால் மிகையல்ல.