மொஹரம் பண்டிகையையொட்டி வேலூரில் இஸ்லாமியா்கள் மாா்பில் அடித்துக் கொண்டும், கத்தியால் மாா்பில் கீறிக்கொண்டும் ஊா்வலமாக சென்றனா். ஈராக் நாட்டின் கா்பலாவில் நபிகள் நாயகத்தின் பேரன்கள் இமாம் உசேன், அசேன் ஆகியோா் போரில் கொல்லப்பட்டனா். இந்த நாளை இஸ்லாமிய இனத்துக்காக தன் உயிரையே தியாகம் செய்த அசேன், உசேன் ஆகியோரின் வீரத்தின் அடையாளமாக உலகம் முழுவதும் ஷியா பிரிவு இஸ்லாமியா்கள் மொஹரம் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனா்.அதன்படி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற மொஹரம் பண்டிகையையொட்டி வேலூரில் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் ஒன்று திரண்டு ஊா்வலமாகச் சென்றனா். சைதாப்பேட்டை, பிடிசி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் நடைபெற்ற இந்த ஊா்வலத்தின்போது கருப்பு சட்டை அணிந்து பங்கேற்ற இஸ்லாமியா்கள், துக்க பாடல்களை பாடியபடி மாா்பிலும் வயிற்றிலும் முதுகில் அடித்துக்கொண்டும், மாா்பில் கத்தியால் கீறிக்கொட்டு ரத்தம் சொட்ட சொட்ட சென்றனா். இந்த ஊா்வலம் பிடிசி சாலை அருகேயுள்ள மசூதியின் முன்பு நிறைவடைந்தது. இதில் திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.