ஸ்வீடனைப் பின்பற்றலாம்!

Wait 5 sec.

இந்தியாவில் சொந்தங்கள் விட்டு போகக் கூடாது, சொத்துகள் கைமாறி விடக் கூடாது போன்ற நோக்கங்களுடன் அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. சில பெற்றோர் தம் பிள்ளைகள் யாரையாவது விரும்பிவரும் நிகழ்வுகள் அவர்களின் கவனத்துக்கு வரும்போது, உடனே அத்தை, மாமா பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்துவிடும் வழக்கமும் உண்டு.நெருங்கிய ரத்த உறவினர்களுக்கு இடையிலான திருமணங்களை ஸ்வீடன் நாடு முற்றிலும் தடை செய்துள்ளது. இந்தச் சட்ட முன்மொழிவுக்கு ஸ்வீடன் நாடாளுமன்றம் ஒருமனதாக வாக்களித்து ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய சட்டம் 1.07.26 முதல் அதிகாரபூர்வமாக அமலுக்கு வருகிறது. ஜூலை 1, 2026-க்குப் பிறகு இந்தியா உள்ளிட்ட வெளிநாடு களில் இத்தகைய உறவுமுறைத் திருமணம் செய்துகொண்டு, அதன் அடிப்படையில் ஸ்வீடன் விசா அல்லது குடியுரிமை பெற முயன்றால், அந்தத் திருமணத்தை ஸ்வீடன் அரசு அங்கீகரிக்காது. இந்தத் தடைச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு ஸ்வீடனுக்கு வரும் அனைத்து நாட்டு பார்வையாளர்களின் திருமணங்களுக்கும் இது பொருந்தும். அதற்கு முன்னர் ஸ்வீடனில் சட்டபூர்வமாகச் செய்யப்பட்ட திருமணங்கள் தொடர்ந்து செல்லுபடியாகும்.பிரிட்டனின் பிரபல மருத்துவ ஆய்விதழான லான்செட் இதழில், நெருங்கிய உறவினர் திருமணம் குறித்த ஆய்வில் (2013) ரத்த உறவு திருமணத்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் இரட்டிப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில், பிராட்ஃபோர்டு பகுதியில் 11,300}க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் சுமார் மூன்றில் ஒரு பங்கு குறைபாடு உள்ள குழந்தைகள் பிறப்பதற்கு ரத்த உறவு திருமணமே காரணம் என்று நிரூபணம் ஆகியுள்ளது.இந்தியாவில் 1990 முதல் 2005-ஆம் ஆண்டு வரை பிறந்த செவித்திறன் குறைந்த குழந்தைகள் குறித்த மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகள் கர்நாடகத்தில் 30 சதவீதமும், தமிழ்நாட்டில் 20 சதவீதமும், ஆந்திரத்தில் 20 சதவீதமும் உள்ளனர். இதற்குக் காரணம் அவர்களின் பெற்றோரின் ரத்த உறவு திருமணங்களே என்றும் கூறப்படுகிறது. நாட்டில் பிறக்கும் ஐந்தில் ஒரு குழந்தை செவித்திறன் குறைபாடுடன் பிறப்பதற்கு ரத்த உறவு திருமணமே காரணமாகக் கூறப்படுகிறது.ரத்த உறவு திருமணத்தால் இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் ஆறு முதல் எட்டு லட்சம் குழந்தைகள் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களாக பிறக்கிறார்கள். குறிப்பாக, சில தென்னிந்திய மாநிலங்களில் இதன் அளவு தேசிய அளவை விட அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. ரத்த உறவுத் திருமணங்கள் நடப்பதில் தென்னிந்திய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. கேரளம் தவிர ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இன்றும் இது நடைமுறையில் உள்ளது.பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிறப்புக் குறைபாடுகளைத் தடுப்பது, குடும்ப கெüரவம் என்ற பெயரில் நடக்கும் வன்முறைகள் மற்றும் கெüரவக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்றவை ரத்த உறவின் திருமண முறைக்கு எதிரான நோக்கங்களாகும்.இன்றைய எண்ம யுகத்தில் காதல் திருமணங்கள் பெருகி, சொந்தங்களுக்குள் திருமணங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. எனினும், இந்தியக் குடும்பங்களின் கட்டாயத்துக்காக பெண்ணோ அல்லது ஆணோ தங்களுக்குப் பிடிக்காமலேயே உறவு முறையில் திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் இன்னும் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டுத்தான் இருக்கின்றன.ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்வதால் பிறக்கும் குழந்தைகள் மாற்றுத்திறனாளியாக பிறப்பது, அறிவாற்றல் குறைபாட்டுடன் பிறப்பது, குழந்தைப் பருவத்திலேயே இறப்பது போன்ற அபாயங்கள் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.மேலும், ரத்த உறவுத் திருமணங்களால், சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் எனப்படும் நுரையீரல் மற்றும் செரிமானக் கோளாறு, தலசீமியா எனப்படும் ரத்த அழிவு சோகை கோளாறு, வாரிசுகளில் இயல்பை விட குறைவான அளவு ஹீமோகுளோபின், குறைவான ரத்த சிவப்பணுக்கள், அரிவாள் செல் எனப்படும் ரத்த சோகை, டெய் சாக்ஸ் எனப்படும் மூளை, முதுகுத்தண்டு, நரம்பு செல்களுக்கு அழிவை ஏற்படுத்தும் ஓர் அபாயகரமான மரபணுக் கோளாறு, தசை பலவீனம், நடுக்கம், தசைப்பிடிப்பு, நடக்கும் திறன் இழப்பு, பேசுவது மற்றும் விழுங்குவதில் சிக்கல்கள் மற்றும் மனநலக் கோளாறுகள் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.ஜாதி ரீதியாக இயங்கும் திருமண இணையதளங்கள் நெருங்கிய ரத்த உறவுகளுக்குள் திருமணம் தொடர்வதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அதிக சொத்து இருப்பவர்கள், திருமணத்துக்கான செலவுகளை அதிகம் செய்யமுடியாதவர்கள் என இரண்டு பிரிவுகளை சேர்ந்தவர்களும் இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள். திருமண உறவில் பெண்களின் ஆரோக்கியமும், அந்தப் பெண்ணுக்கு பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியமும் முக்கியமானவையாகக் கருதப்பட வேண்டும். இதை ஒவ்வொரு பெற்றோரும் புரிந்துகொள்ள வேண்டும்.பல முன்னேற்றங்களை அடைந்துள்ள நம் நாட்டில் இந்த பழக்கம் தொடர்வது தடுக்கப்பட வேண்டும். ரத்த சொந்தத்தில் திருமணம் தொடர்ந்தால், அது ஆரோக்கியமான மனித வளத்தை நாட்டுக்கு தராது. இதைச் சார்ந்த விழிப்புணர்வுகளும், ஆலோசனைகளும் பொதுமக்களுக்கு தற்போது மிகவும் தேவை. இது சார்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக் கல்லூரி வளாகங்கள், கல்லூரிகள், சமூக ஊடகங்கள், திரைப்படங்கள், பொதுவெளிகள் போன்ற இடங்களில் மத்திய, மாநில அரசுகள் நடத்தலாம்.