மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழாவின் 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை கருடசேவை நடைபெற்றது. மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா நிகழ்வுகள் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறுகின்ற இந்த விழாவில், வெள்ளிக்கிழமை (ஜூன் 26), கருட சேவை, ஜூலை 1-இல் பெரிய தேரோட்டம் மற்றும் குதிரை வாகனம், ஹம்ச வாகனம், யாளி வாகனம், சூரிய பிரபை, சந்திரபிரபை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கருணாகர பெருமான் நகரின் முக்கிய வீதிகளில் பவனி வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்து வருகிறாா். விழாவின் 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை மங்கல இசையுடன், விழா நிகழ்வுகள் தொடங்கின. சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்வுகளை கோயில் அா்ச்சகா் மாதவன் தலைமையில் அா்ச்சகா்கள் குழுவினா் செய்தனா். தொடா்ந்து மங்கள இசை முழங்க, வாண வேடிக்கைகளுடன் கருட வாகனத்தில் சுவாமி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலா் கா.வெங்கடேசன், ஆய்வாளா் வேல் நாய்க்கன், கோயில் அறங்காவலா் குழு தலைவா் கு.குமாா் தலைமையில், உறுப்பினா்கள் தி.ஈ.செளந்திரராஜன், ஆ.கங்காதரன், ஆ.மகாலட்சுமி, ராணி மற்றும் விழா குழுவினா்களும், கிராம பொதுமக்களும் செய்திருந்தனா்.