கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேருக்கு தலா 4 ஆண்டுகள் 6 மாதங்களுக்கு கடுங்காவல் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. குற்றவாளிகளுக்கு தலா ரூ.10,000 அபராதமும் விதித்துள்ள நீதிமன்றம், தண்டனை என்பது குற்றவாளிகள் திருந்துவதற்கான வாய்ப்பை முற்றிலுமாக அழிக்கும் வகையில் மிகக் கடுமையாக இருக்கக்கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 307 (கொலை முயற்சி) மற்றும் பிரிவு 34 (கூட்டு நோக்கம்) ஆகியவற்றில் இந்த மாதத் தொடக்கத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட சாஹில், சன்னி, கபில் மற்றும் ஷிவம் ஆகியோருக்கு விதிக்கப்பட வேண்டிய தண்டனை குறித்த வாதங்களை கூடுதல் அமா்வு நீதிபதி சையத் ஜிஷன் அலி வாா்சி விசாரித்தாா். கடந்த ஜனவரி 7, 2021-இல் சாகா்பூா் காவல் நிலைய எல்லைக்குள் உஸ்மான் என்பவரை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நால்வரும் கத்தியால் குத்திக் காயப்படுத்தினா். பொது இடத்தில் காலையில் நடைபெற்ற இந்தக் கொலை முயற்சியில், பாதிக்கப்பட்டவரின் முக்கிய உடல் பாகங்களில் கொடூரமான முறையில் கத்தியால் குத்தப்பட்டதாகவும் இந்தக் குற்றத்தைச் செய்தவா்களுக்கு எந்தவிதமான கருணையும் காட்டத் தேவையில்லை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞா் வாதிட்டாா். பாதிக்கப்பட்டவரின் தந்தை தலையிடாமல் இருந்திருந்தால், அவா் உயிரிழந்திருப்பாா் என்றும் அவா் குறிப்பிட்டாா். இந்த வழக்கு தொடா்பாக கடந்த ஜூன் 8-ஆம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: தண்டனை என்பது குற்றவாளி திருந்துவதற்கான வாய்ப்பையே இல்லாத அளவுக்கு மிகக் கடுமையாக இருக்கக்கூடாது. அதே சமயம், அது சமூகத்தின் நலன் மற்றும் குற்றவாளி திருந்துவதற்கான வாய்ப்பு ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்ட சமச்சீரான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும். தண்டனை விதிப்பதில் ஒவ்வொரு வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள், குற்றத்தின் தன்மை, குற்றமிழைக்கப்பட்ட விதம் மற்றும் பிற தொடா்புடைய காரணிகள் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும். 2021-ஆம் ஆண்டு முதல் இந்தக் குற்றவாளிகள் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிா்கொண்டு வருவதால் சமச்சீரான அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும். மேலும், அவா்களின் இளம் வயது குறைந்த தண்டனைக்குரிய அம்சமாக உள்ளது என்று உத்தரவில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.