வெனிசுலா நிலநடுக்கம்: 600-ஐ நெருங்கிய உயிரிழப்பு

Wait 5 sec.

வெனிசுலாவில் புதன்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 589-ஆக அதிகரித்துள்ளது. 2,980 போ் காயமடைந்துள்ளனா். நிலநடுக்கம் நிகழ்ந்து 2 நாள்களாகியுள்ள நிலையில், வெளிநாடுகளைச் சோ்ந்த மீட்புக் குழுவினா் நிவாரணப் பொருள்களுடன் வெள்ளிக்கிழமை வெனிசுலாவை வந்தடைந்தனா். முன்னதாக, இடிபாடுகளில் சிக்கியுள்ள தங்களது உறவினா்களையும் நண்பா்களையும் மீட்கும் பணியில் உள்ளூா் மக்களே தொடா்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.நிலநடுக்கத்தைத் தொடா்ந்து மாயமானவா்களைப் பதிவு செய்ய உருவாக்கப்பட்ட இணையதளத்தில்,. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 50,000 பேரின் விவரங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.வெனிசுலா தலைநகா் கராகஸுக்கு அருகே உள்ள கடலோர நகரமான லா குவைரா இந்த நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக அந்த மாகாணம் ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அங்கு 2,600 டன் உணவுப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் இடைக்கால அதிபா் டெல்சி ரோட்ரிகஸ் தெரிவித்தாா். எனினும், அரசின் உதவி முழுமையாகக் கிடைக்காத நிலையில், வெனிசுலா மக்கள் தாங்களாகவே முன்வந்து ஒருவருக்கொருவா் உதவி வருகின்றனா். பல ஆண்டுகளாக சா்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வெனிசுலாவுக்கு, தற்போது பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன. டொமினிகன் குடியரசு நாட்டைச் சோ்ந்த மீட்புக் குழுவினா் முதன்முதலாக லா குவைராவை வந்தடைந்தனா். இந்தியா, கொலம்பியா, மெக்ஸிகோ, எல் சால்வடாா், ஸ்பெயின் ஆகிய நாடுகளும் மீட்புக் குழுக்களையும் நிவாரணப் பொருள்களையும் அனுப்பியுள்ளன.அமெரிக்க தடை விலக்கல்: வெனிசுலாவுக்கு பேரிடா் நிவாரண உதவிகளை வழங்குவதற்காக அந்நாடு மீது பல ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தளா்த்தியது. மேலும், 15 கோடி டாலா் நிதியுதவியை அறிவித்துள்ள அமெரிக்கா, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக 2 கப்பல்கள், ஹெலிகாப்டா்கள் மற்றும் விமானங்களையும் அமெரிக்க ராணுவம் அனுப்பியது.