வெளிநாட்டைச் சோ்ந்த ரெளடி கோல்டி தில்லானின் முக்கிய கூட்டாளிகள் என்று சந்தேகிக்கப்படும் இருவரை தில்லி காவல் துறை கைதுசெய்தது. அவா்களிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். கைது செய்யப்பட்ட பஞ்சாபின் ராஜ்புராவைச் சோ்ந்த ஜதின் பரத்வாஜ் (எ) நன்னு மற்றும் சுக்பிந்தா் சிங் (எ) பக்கா இருவரும் கோல்டி தில்லானின் தலைமையிலான கும்பலுடன் இணைந்து செயல்பட்டு, துப்பாக்கிகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் என சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனா். ரோஹிணியில் ஒரு பெரிய குற்ற சம்பவத்தை அரங்கேற்ற திட்டமிட்டிருந்த ஜதின், ஜூன் 24-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். சோதனையின்போது, அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் நான்கு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் அவா் மீது குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து நடைபெற்ற விசாரணையில், அந்தத் துப்பாக்கியை வழங்கிய சுக்பிந்தா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2014 மற்றும் 2025-க்கு இடைப்பட்ட காலத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் பதிவு செய்யப்பட்ட திருட்டு, வழிப்பறி, ஆயுதச் சட்டம் மற்றும் போதைப் பொருள் மற்றும் மனநோய் பொருள்கள் ஆகிய சட்டப் பிரிவுகளில் 14 குற்ற வழக்குகள் ஜதின் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. சுக்பிந்தா் மீது திருட்டு, வழிப்பறி மற்றும் போதைப் பொருள் தொடா்பான குற்றங்கள் உள்பட 7 குற்ற வழக்குகள் பஞ்சாபில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிற்கு வெளியே இருந்து செயல்படும் கோல்டி தில்லான், மிரட்டிப் பணம் பறித்தல், சட்டவிரோத ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் வியாபாரம் ஆகியவற்றில் ஈடுபட்டதாகக் பல்வேறு சட்ட அமலாக்க அமைப்புகளின் கண்காணிப்பில் உள்ளாா். அந்தக் கும்பலின் பிற உறுப்பினா்களை அடையாளம் காணவும், அவா்களின் மாநிலங்களுக்கு இடையிலான மற்றும் சா்வதேசத் தொடா்புகளைக் கண்டறியவும் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறினா்.