மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) அதிகாரிகளுக்கு 15 ஆண்டுகளுக்குப் பின் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.மத்திய ரிசர்வ் காவல் படையில் (சிஆர்பிஎஃப்) 15 ஆண்டுகளாகப் பணியாற்றிய 250-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் முதல்முறையாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். மத்திய ஆயுதக் காவல் படைகளில் (சிஏபிஎஃப்) பணிமூப்பு, காலிப்பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக நீண்டகாலமாக நடைபெற்ற வழக்குகள் மற்றும் சேவைப் பிரச்னைகள் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உச்சநீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மத்திய ஆயுதக் காவல் படைகளில் தொடக்க நிலை அதிகாரி பதவியான 263 உதவி நிலை கமாண்டர்கள், துணை கமாண்டர்களாக பதவி உயர்த்தப்பட்டனர். மத்திய ரிசர்வ் காவல் படை இந்த விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கொண்டு சென்றதன் மூலம் ஏப்ரல் 16 அன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் பதவி உயர்வுக்கு காத்திருந்த அதிகாரிகளுக்கு 5 ஆண்டுகளுக்குள் கிடைத்திருக்க வேண்டிய இந்த பதவி உயர்வு 15 ஆண்டுகள் கழித்துக் கிடைத்திருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.பதவி உயர்வுகள் வழங்கப்பட்டாலும் புதிய பணி நியமன உத்தரவுகள் வெளியாகும் வரை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களின் முந்தைய பணிகளில் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், உதவி கமாண்டர் பொறுப்பில் ஏற்படும் காலிப் பணியிடங்கள், இன்ஸ்பெக்டர் நிலையில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க வழிவகுக்கும். இதனால், அதற்கு கீழ்நிலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் சுமார் 3.25 லட்சம் பணியாளர்களைக் கொண்ட மத்திய ஆயுதக் காவல் படைகளிலேயே மிகப்பெரிய அமைப்பான சிஆர்பிஎஃப், உள்நாட்டுப் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றி வருகின்றது. இது, நக்சல் எதிர்ப்பு, ஜம்மு - காஷ்மீர் பயங்கரவாத எதிர்ப்புப் நடவடிக்கைகள் போன்றவற்றில் ஈடுபடுத்தப்படுகின்றது. Central Reserve Police Force (CRPF) officers have been granted promotions after 15 years.