வேறு மதத்திலிருந்து முஸ்லிம் மத்துக்கு மாறியவருக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என சாதிச் சான்றிதழ் வழங்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர், கடந்த 2015ஆம் ஆண்டு முஸ்லிம் மதத்துக்கு மாறினார். தொடர்ந்து, முஸ்லிம் லெப்பை என சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, சாதிச் சான்றிதழ் குறித்து தமிழக அரசு கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் மனுதாரர், சாதித் சான்றிதழ் கோரியிருக்கிறார்.அந்த அரசாணைப்படி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர், பட்டியல் சாதி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், முஸ்லிம் மதத்துக்கு மாறும்போது, குறிப்பிட்ட 7 பிரிவுகளில் ஏதேனும் ஒன்றுக்கு மாறினால் அவர்களுக்கு மட்டும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள் என சாதிச் சான்றிதழ் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.சமூக, கல்வி ரீதியாக பின் தங்கிய குடிமக்கள் அல்லது பட்டியல் சாதியினர் அல்லது பட்டியல் பழங்குடியினரின் முன்னேற்றத்துக்காக ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன. இந்த பிரிவினர் மதம் மாறும்போது அவர்களுக்கான ஒதுக்கீடுகள் கிடைப்பதை உறுதி செய்யவே இந்த அரசாணையானது வெளியிடப்பட்டது. இட ஒதுக்கீடு விஷயத்திலும் தமிழக அரசு கவனமாக செயல்படுகிறது.அதுபோலவே, முஸ்லிம் மதத்தைப் பின்பற்றும் அனைவரையும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் சேர்க்காமல், குறிப்பிட்ட பிரிவினரை மட்டுமே சேர்த்துள்ளது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் முன்பு பிறப்பித்த உத்தரவில், முஸ்லிம் மதத்துக்கு மாறியவுடன் ஒருவர் முஸ்லிம் ஆகிறார். அவரை குறிப்பிட்ட பிரிவுக்குள் சேர்க்க முடியாது என தீர்ப்பு உள்ளது. எனவே, தமிழக அரசு அரசாணையால் இந்த தீர்ப்பை மாற்ற முடியாது. நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக அரசு செயல்பட முடியாது. முஸ்லிம் மதத்துக்கு மாறியவர்கள் ஏதேனும் ஒரு வகையான இட ஒதுக்கீட்டின் கீழ் பயனடையவே இந்த அணுகுமுறையை தமிழக அரசு பின்பற்றியிருக்கிறது. எனவே, 2024ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது. அந்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. இதன் மூலம், முஸ்லிமாக மதம் மாறியவர் ஒரு முஸ்லிம் மட்டுமே, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம் என சாதிச் சான்றிதழ் கோர முடியாது என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.