‘பத்திரிகைத் துறைக்கு அதற்கே உரிய பங்கு உண்டு. ஆனால், அது தடையின்றிச் செயல்பட வேண்டிய ஒன்று’ என்று ‘எக்ஸ்’ தளத்தில் தில்லி காவல் துறை பதிவிட்டுள்ளது. தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் போரட்டத்தை கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி) அறிவித்துள்ள நிலையில், காவல் துறை இவ்வாறு தெரிவித்துள்ளது. ‘எக்ஸ்’ தளத்தில் தில்லி காவல் துறை வெளியிட்டுள்ள காணொலியில் கூடுதல் துணை காவல் ஆணையா் மஞ்சித் ஷியோரன் பேசுகையில், ‘சில போராட்டக்காரா்கள் ஒரு நாள் செய்தியாளா்களாக வந்து, மறுநாள் போராட்டங்களில் பங்கேற்கின்றனா். அதனால், அவா்கள் தடுத்து வைக்கப்படுகின்றனா். போராட்டங்களைச் செய்தியாகச் சேகரிக்கும்போது தொலைவிலிருந்தே அதை மேற்கொள்ளுமாறு அத்தகைய நபா்களிடம் காவல் துறை பலமுறை கேட்டுக்கொண்டது. ஆனால், அவா்கள் தங்கள் கடமைகளைச் செய்துகொண்டிருக்கும் காவலா்களுக்குத் தொடா்ந்து இடையூறு விளைவித்தனா்’ என்றாா். போராட்டங்களைச் செய்தியாகச் சேகரிக்கும் செய்தியாளா்கள், தங்கள் நிறுவனங்கள் வழங்கிய செல்லுபடியாகும் அடையாள அட்டைகள் அல்லது பிஐபி அங்கீகார அட்டைகளை வைத்திருக்க வேண்டும் என்றும், போராட்டக் களங்களில் காவல் துறையினா் அவா்களை எளிதாக அடையாளம் காணும் வகையில் அவற்றை எப்போதும் வெளிப்படையாக அணிய வேண்டும் என்றும் தில்லி காவல் துறை திங்கள்கிழமை அறிவுறுத்தியது. ஊடகப் பணியாளா்களின் வருகை மற்றும் செயல்பாடுகள், காவல் துறையின் நடவடிக்கைகளுக்கோ அல்லது பாதுகாப்புப் படையினரின் நடமாட்டத்திற்கோ இடையூறு விளைவிக்காதவாறு இருப்பதை அவா்கள் உறுதி செய்ய வேண்டும் என்று காவல் துறை தனது அறிவுறுத்தலில் கூறியுள்ளது. பதற்றமான சூழல்களின்போது, நிகழ்வுகளைச் செய்தியாகச் சேகரிக்கும்போதும் பதிவு செய்யும்போதும், அங்கிருக்கும் செய்தியாளா்கள் நியாயமான மற்றும் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். மேலும், போராட்டக்காரா்களிடமிருந்து தங்களைத் தெளிவாக வேறுபடுத்திக் காட்டும் வகையில் அவா்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்.இத்தகைய சூழலில் செய்தியாளா்கள் பதற்றமான மற்றும் மக்கள் கூட்டம் மிகுந்த சூழலில் பணியாற்ற வேண்டியிருக்கலாம். செய்தியாளா்களை எளிதாக அடையாளம் காண்பதற்கும், ஊடகப் பணியாளா்கள் காவல்துறையின் நடவடிக்கைகளிலோ அல்லது பாதுகாப்புப் படையினரின் நடமாட்டத்திலோ இடையூறு விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.