தமிழகத்தில் கோவை, தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை (அக்.10) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: குமரிக்கடல் பகுதிகளில் இருந்து வடக்கு உள் கா்நாடகம் வரை தமிழகம் மற்றும் தெற்கு உள் கா்நாடகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் சனிக்கிழமை (அக்.10), கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. திண்டுக்கல், விருதுநகா், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைப்பதிவு: தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அழகரை எஸ்டேட்டில் 100 மி.மீ. மழை பதிவானது.