பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம் அக். 14 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.பெரம்பூர் தொகுதியில், 53 ஆயிரத்து 715 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தொகுதி வாக்காளர் தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி வி. லட்சுமிநாராயணன் விசாரித்தார். விஜய் தரப்பில், வேட்புமனுவில் அனைத்து தகவல்களையும் தெரிவித்துள்ளதாகவும், எந்த தகவலையும் மறைக்கவில்லை என வாதிடப்பட்டது.தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்த வாக்காளர் தினேஷ் தரப்பில், முதல்வர் விஜய் தனது வேட்புமனுவில், பண்ருட்டியில் வாங்கியிருந்த 30 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய நிலம் குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை எனவும், தகவல்களை மறைத்தது, வாக்காளர்கள் சுதந்திரமாக முடிவெடுக்கும் திறனில் தேவையில்லாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் வாதிடப்பட்டது. வேட்புமனுவில் தகவல்களை மறைப்பது, வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துவதுதான் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் வாங்கியுள்ளதாகக் கூறியுள்ள 50 செண்ட் நிலம், வருவாய் துறை ஆவணங்களின்படி, அரசு புறம்போக்கு நிலம் என தினேஷ் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.வேட்புமனுக்களில் குற்ற வழக்குகளை மறைப்பது எப்படி விதிமீறலோ, அதேபோல சொத்து விவரங்களை மறைப்பதும் விதிமீறல் மட்டுமல்ல, ஊழல் நடவடிக்கை. விவரங்களை மறைத்தது குறித்து தேர்தல் அதிகாரி முழுமையான விசாரணை நடத்த முடியாது. தேர்தல் வழக்கில்தான் இதுகுறித்து விரிவாக விசாரிக்க முடியும் என்பதால், தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கூடாது என வாதிடப்பட்டது.அப்போது குறுக்கிட்ட நீதிபதி லட்சுமிநாராயணன், ஆக்கிரமிப்பாளர் தேர்தலில் போட்டியிடுவதில் தகுதி இழப்பு ஏற்படுகிறதா? வில்பட்டி நிலம் தொடர்பாக விஜய், விற்பனை பத்திரத்தை வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ளாரே எனவும் கேள்வி எழுப்பினார்.அதற்கு தினேஷ் தரப்பில், வருவாய் துறை ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக விளக்கமளித்தார்.முதல்வர் விஜய் தரப்பில், வேட்புமனுவில் தகவல்களை மறைத்தது வாக்காளர்கள் சுதந்திரமாக முடிவெடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, குற்ற வழக்கு சம்பந்தப்பட்டது. விஜய் வசதிபடைத்தவர் என எல்லா வாக்காளருக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது, சொத்தை மறைத்ததாகக் கூறி, அது வாக்காளர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எப்படி கூற முடியும்? என வாதிடப்பட்டது.தினேஷின் தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, அந்த மனு மீதான தீர்ப்பை, நீதிபதி, அக்டோபர் 14 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.Election Case: Verdict on petition filed by Chief Minister Vijay reserved