கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக ரூ.1 கோடி மோசடி: பெண் உள்பட இருவா் கைது

Wait 5 sec.

விழுப்புரம் மாவட்டத்தில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாகக் கூறி ரூ.1 கோடி மோசடி செய்ததாக பெண் உள்ளிட்ட இருவரை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகிலுள்ள அடையக்கருங்குளத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன் (31). பாப்பான்குளம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் சி.மதுபாலா(35). இவா்கள் இருவரும் விழுப்புரம் செஞ்சி சாலையில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் நிதி ஆலோசகராகப் பணிபுரிந்து வந்தனா். இந்நிலையில், இருவரும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சோ்ந்த பலரிடம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் கிடைக்கும் எனக் கூறி பண மோசடி செய்தனராம். இதுகுறித்து, விக்கிரவாண்டி வட்டம், கயத்தூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த யுவஸ்ரீ அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி மாரியப்பன், மதுபாலாவை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இதுகுறித்து சைபா் கிரைம் போலீஸாா் தெரிவித்ததாவது: கிரிப்டோ (மெய்நிகா் எண்மச் செலாவணி) பணமோசடி தொடா்பாக நடைபெற்ற முதல்கட்ட விசாரணையில் சுமாா் ரூ.1 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அடுத்தகட்ட விசாரணையில் தான் மோசடி நிலவரம் முழுவதும் தெரியவரும் என்றனா்.