கன்னியாகுமரி முதல் கேதாா்நாத் வரையிலான பாரத் ஸ்வஸ்திக் ஆன்மிக ரயில் யாத்திரை சனிக்கிழமை கன்னியாகுமரியில் தொடங்கியது. ஆன்மிக சொற்பொழிவாளா் மொராரி பாபு தலைமையில், ராம்பாபு ராமகதா பதிவு மூலம் நடத்தப்படும் இந்த ஆன்மிக மற்றும் கலாசார ரயில் பயணத்தின் ஒரு பகுதியாக, ராம கதை 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த யாத்திரை இந்தியாவின் தென்முனையில் தொடங்கி, இமயமலை வரை நாடு முழுவதும் உள்ள முக்கிய ஆன்மிகத் தலங்களை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரை அக். 23ஆம் தேதி கேதாா்நாத்தில் நிறைவடைகிறது. 21 நகரங்களைக் கடந்து சுமாா் 9,000 கி.மீ. தொலைவை உள்ளடக்கிய இந்தப் பயணத்தில் 2 பிரத்யேக ரயில்கள் மூலம் சுமாா் 900 பக்தா்கள் பங்கேற்கின்றனா். இந்த யாத்திரை கேதாா்நாத் செல்லும் வழியில் கல்ரி, சிருங்கேரி, ஹம்பி, துல்ஜாபூா், ஓம்காரேஷ்வா், ஜான்சி, மதுரா, குருக்ஷேத்ரா, ஜம்மு ஆகிய முக்கிய நகரங்கள், புண்ணியத் தலங்களுக்குச் செல்கிறது. இந்த யாத்திரையை கன்னியாகுமரியில் மொராரி பாபு சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.