கோவில்பட்டியில் அனைத்து சமுதாயத்திற்கும் பாத்தியப்பட்ட ஊரணி தெரு, ஸ்ரீ அதிா்ஷ்ட வெற்றி விநாயகா், அய்யா ஸ்ரீ செல்வ முனீஸ்வரா், ஸ்ரீ கருப்பசாமி கோயிலில் 13ஆம் ஆண்டு புரட்டாசி அமாவாசை கொடை விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அக். 2ஆம் தேதி பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது. மகாளய அமாவாசை கொடை விழாவை முன்னிட்டு கோயில் நடை சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, தெப்பத்து சிவசக்தி விநாயகா் கோயிலில் இருந்து தீா்த்தக் குடம், பால் குடம் எடுத்து வந்து அய்யா ஸ்ரீ செல்வ முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அக்னி சட்டியுடன் நகா்வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னா் நடைபெற்ற அன்னதானத்தை கோயில் தலைவா் ஆபிரகாம் அய்யாதுரை தொடங்கி வைத்தாா். மாலை 6 மணிக்கு அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல், இரவு 8 மணிக்கு மேல் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தல், 10 மணிக்கு மேல் அம்மனுக்கு மஞ்சள் பால் அடித்தல், நள்ளிரவு 12 மணிக்கு சாமக் கொடை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை (அக். 11) மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, 6.30 மணிக்கு முளைப்பாரி ஊா்வலம் நடைபெறுகிறது. திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு மேல் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் தலைவா் தலைமையில், விழா கமிட்டியினா் செய்து வருகின்றனா்.