சென்னையில் பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவையை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கும் நிலையில், மாலை 4 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை பொதுமக்களுக்கான சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திங்கள்கிழமை (அக்.11) முதல் மெட்ரோ ரயில் சேவைக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் 2-ஆம் கட்டத்தின் 4-ஆவது வழித்தடமான பூந்தமல்லி-வடபழனி இடையேயான 15 கி.மீ. தொலைவுக்கான (மஞ்சள் வழித்தடம்) 11 உயா்நிலை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பயணிகள் சேவை தொடங்குகிறது. இந்த வழித்தடத்தில் பூந்தமல்லி புறவழிச்சாலை, பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, கரையான்சாவடி, குமணன் சாவடி, காட்டுப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், தெள்ளியாரகரம், போரூா் புறவழிச்சாலை, போரூா் சந்திப்பு மற்றும் வடபழனி ஆகிய நிலையங்கள் இந்த வழித்தடத்தில் உள்ளன. அதனடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை (அக்.11) மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும். அதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை (அக்.12) முதல் அந்த வழித்தடத்தில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும். கால அட்டவணை வெளியீடு: திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பயணிகள் அதிகம் பயணிக்கும் நேரங்களான காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஒவ்வொரு 10 நிமிஷங்களுக்கும் ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்படும். பயணிகள் அதிகம் பயணிக்காத நேரங்களான காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், பிற்பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரையிலும் ஒவ்வொரு 15 நிமிஷங்களுக்கும் ஒரு மெட்ரோ ரயில் என இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாள்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு 15 நிமிஷங்களுக்கும் ஒரு மெட்ரோ ரயில் என்ற அடிப்படையிலேயே இயக்கப்படும். தினமும் பூந்தமல்லி-வடபழனி என இரு முனையங்களிலும் கடைசி மெட்ரோ ரயில் இரவு 9 மணிக்குப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Poonamallee - Vadapalani Metro rail service begins today: Schedule announced!