கீர்த்தி சுரேஷின் திரைப்பயணத்தில் நடிகையர் திலகம் (மகாநடி) திரைப்படம் இன்றளவும் மிக முக்கியமான திரைப்படமாக உள்ளது. அந்த வரிசையில் அவர் நடித்திருக்கும் 'டோரதி' திரைப்படமும் இணைந்துள்ளது. விவாதத்துக்குரிய விஷயத்தை படமாக்கி, அதை வணிக ரீதியாகவும் வெற்றி பெறச் செய்வது மிகவும் கடினம். ஆனால், கார்த்திக் சுப்புராஜ் தனது எழுத்தின் மூலம் அதைச் சாத்தியமாக்கியுள்ளார். 'படத்தில் என் கதாபாத்திரம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. அந்தக் கதாபாத்திரத்தில் பல அடுக்குகள் இருப்பதை என்னால் உணர முடிந்தது. சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி இயக்குநர் உணர்வுபூர்வமாக இந்தக் கதையில் பேசியுள்ளார்.பெண்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படையாகப் பேசுவதற்குத் தடையாக இருக்கும் ஆணாதிக்கம், சமத்துவத்துக்கான அவர்களின் மனவேதனை, தங்களது கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான உரிமை ஆகிய அனைத்தும் உணர்வுபூர்வமாகப் படமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, புறச்சூழல் அழுத்தம் காரணமாகத் திருமண வாழ்க்கைக்குள் நுழையும் பெண்கள் அனுபவிக்கும் வலியும் இப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது' என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.