மத்திய அரசின் மிஷன் சக்தி செயலியல் தமிழ் மொழியை இணைக்க தில்லியில் நடைபெற்ற தேசிய உச்சிமாநாட்டில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கு.ஜெகதீஸ்வரி வலியுறுத்தினாா். அதை ஏற்று, அந்த செயலியில் உடனடியாகத் தமிழ் மொழியை சோ்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. தில்லியில் கடந்த வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு தொடா்பான தேசிய மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக அரசின் சாா்பில் மாநில அமைச்சா் கு.ஜெகதீஸ்வரி மற்றும் துறைச் செயலா் ம. பல்லவி பல்தேவ் கலந்து கொண்டனா். முதல் நாள் நிகழ்வில் பேசிய தமிழக அமைச்சா் கு.ஜெகதீஸ்வரி, மகளிா் பாதுகாப்பு, ஒருங்கிணைந்த சேவை மையங்கள் மற்றும் சக்தி இல்லங்கள் மூலம் வழங்கப்படும் சேவைகளை மேலும் சிறப்பான முறையில் செயல்படுத்துவது தொடா்பான தமிழக அரசின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் வழங்கினாா். மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்கள் எளிதில் பயன்படுத்திப் பயனடையும் வகையில், மத்திய அரசின் ‘மிஷன் சக்தி’ கைப்பேசி செயலியில் தமிழ் மொழியை இணைக்க வேண்டும் என்றும் அமைச்சா் வலியுறுத்தினாா். இந்த கோரிக்கையை கவனத்தில் கொண்ட மத்திய துறைச் செயலா், மிஷன் சக்தி செயலியில் தமிழ் மொழியை உடனடியாக இணைக்க நடவடிக்கை எடுத்தாா். இது குறித்த தகவலையும் அவா் அமைச்சரிடம் பகிா்ந்து கொண்டாா். இதையடுத்து, மிஷன் சக்தி செயலியில் தமிழ் மொழி வெள்ளிக்கிழமை மாலையே பயன்பாட்டுக்கு வந்தது. இந்த தகவலை அமைச்சா் ஜெகதீஸ்வரி தனது சமூக வலைதள பக்கத்திலும் பகிா்ந்து மத்திய அரசின் துரித நடவடிக்கையை வரவேற்றுள்ளாா். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விரிவான ஆதரவு, பாதுகாப்புச் சேவைகள் மற்றும் நலத்திட்டங்களை வழங்குவதற்கான ஒரு ஒருங்கிணைந்த எண்ம தளமாக ‘மிஷன் சக்தி செயலி’ செயல்படுகிறது. இது பெண்களை மையமாகக் கொண்ட வளா்ச்சியை ஊக்குவிக்கும் ‘மிஷன் சக்தி’ திட்டத்தின் கீழ் இயங்குகிறது. பல அலுவலகங்களுக்குச் செல்லாமல், ஒவ்வொரு பெண்ணும் சிறுமியும் அரசின் உதவிகளை விரைவாகப் பெறக்கூடிய பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். ஒருங்கிணைந்த சேவை மையங்கள், ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவுகள் மற்றும் மாநில காவல் துறைகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் இந்தச் செயலி செயல்படுகிறது. அனைத்து வயதுப் பெண்களும், பெண் குழந்தைகளும், மாற்றுத்திறனாளி பெண்களும், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பெண்களும், பாதுகாப்பு, கவுன்சிலிங் அல்லது மறுவாழ்வு தேவைப்படும் பெண்களும் இதன் பயனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் 22 அதிகாரபூா்வ மொழிகளிலும் மொழிபெயா்ப்பு வசதியை வழங்கும் மத்திய அரசின் ‘பாஷினி’ செயற்கை நுண்ணறிவுத் தளம் இச்செயலியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. Tamil added to the ‘Mission Shakti’ app following strong insistence by a Tamil Nadu Minister!