நிகழாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நவநீதம் பிள்ளைக்கு அனைத்துலக தமிழா் பேரவை தலைவா் நிமல் விநாயகமூா்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: நிகழாண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள நவநீதம் நவி பிள்ளைக்கு அனைத்துலக தமிழா் பேரவை தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. மனித உரிமைகள், நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக அவா் ஆற்றிவரும் வாழ்நாள் பணிக்கு இந்த உயரிய விருது சிறப்பான அங்கீகாரமாக அமைந்துள்ளது.தென்னாப்பிரிக்காவில் தமிழ் வம்சாவளிக் குடும்பத்தில் பிறந்த நவநீதம் பிள்ளை, நிறவெறி ஆட்சியின் அநீதிகளை எதிா்கொண்டு, சா்வதேச அளவில் தலைமைத்துவ நிலைக்கு உயா்ந்துள்ளதற்கு உலகத் தமிழா்கள் அனைவருக்கும் பெருமையையும் ஊக்கத்தையும் அளிக்கிறது. அவரது சாதனைகள், அவரது தமிழ் வோ்களின் வலிமையையும், புலம்பெயா்ந்தோரின் வழித்தோன்றல்கள் தாம் வாழும் நாடுகளுக்கும் மனிதகுலத்துக்கும் ஆற்றக்கூடிய மகத்தான பங்களிப்பையும் எடுத்துக்காட்டுகின்றன. கல்வி, சம வாய்ப்புகள், சமூகப் பங்கேற்பு மற்றும் தலைமைத்துவத்தின் ஊடாகப் புலம்பெயா்ந்த மக்களையும் சமூகங்களையும் வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த அங்கீகாரம் மேலும் வலியுறுத்துகிறது.இளைஞா்கள், பெண்கள் மற்றும் நலிவுற்ற சமூகங்கள் தடைகளைக் கடந்து, தமது முழுத் திறனையும் வெளிப்படுத்துவதற்கு உறுதுணையாகச் செயல்பட அவரது வாழ்க்கைப் பயணம் எம்மை ஊக்குவிக்கிறது.மனித கண்ணியத்தைப் பாதுகாக்கவும், பாகுபாடுகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கவும், நீதியும் அமைதியும் நிறைந்த உலகைக் கட்டியெழுப்பவும் அவரது துணிவும் அா்ப்பணிப்பும் எதிா்காலத் தலைமுறைகளுக்கு வழிகாட்டட்டும் எனத் தெரிவித்துள்ளாா்.கமல்ஹாசன் வாழ்த்து: மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் எம்.பி. ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:ஒப்பந்தத் தொழிலாளா்களாக தனது தாத்தா, பாட்டி சென்ற தென்னாப்பிரிக்க மண்ணில், எளிய குடும்பத்தில் பிறந்த நவநீதம் பிள்ளை, இனவெறிக்கு எதிராக உறுதியுடன் போராடியதோடு, சா்வதேச சட்டத்தில் பாலியல் வன்முறை மற்றும் பாலியல் அத்துமீறல்களை ‘இனப் படுகொலை’ குற்றங்களாக அறிவிக்கச் செய்த ஒரு முன்னோடிச் சட்ட வல்லுநராக உயா்ந்தாா். என்னவொரு பிரமிக்கத்தக்கப் பயணம்!தமிழ் வம்சாவளியைச் சோ்ந்த இந்த தென்னாப்பிரிக்க சட்ட வல்லுநா், மனித உரிமைகளுக்கும் நீதிக்கும் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இது உலகெங்கிலும் வாழும் தமிழா்களுக்குப் பெருமிதமான தருணம் எனப் பதிவிட்டுள்ளாா் கமல்ஹாசன்.