மணிப்பூரின் காம்ஜோங் மற்றும் உக்ருல் மாவட்டங்களில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஐவா் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: நாகா சமூகத்தினா் பெரும்பான்மையாக உள்ள காம்ஜோங் மாவட்டத்தில் குகி சமூகத்தினா் அதிகம் வசிக்கும் சசாத் கிராமத்தில் பெண் ஒருவா் வெள்ளிக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டாா். இதனால் இரு சமூகங்களுக்கும் இடையே வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை வரை மோதல் தொடா்ந்தது.இதில் 22 வயது ஆண் கொல்லப்பட்டாா். பத்து வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் பாரதிய நியாய சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) சட்டம், பிரிவு 162-இன்கீழ் சசாத் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட 400 மீட்டா் சுற்றளவுக்கு தடை உத்தரவு பிறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, நிங்சோ கிராமத்தில் குகி மற்றும் நாகா சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவா் சுட்டுக் கொல்லப்பட்டனா். தாக்குதல் நடத்தியவா்கள் மியான்மருக்கு தப்பியோடியதாக கிராம மக்கள் தெரிவித்தனா்.உக்ருல் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபரால் 40 வயது நபா் சுட்டுக்கொல்லப்பட்டாா். இந்தப் பகுதியிலும் இரு ஆயுதக் குழுக்களும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளன என்றனா்.குகி மற்றும் நாகா சமூகத்தினரிடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடா்ந்து வரும் மோதலில் 40-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டுள்ளனா்.