பயணிகள் ரயில்களுக்கான என்ஜின்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், குறைந்த வேகத்தில் இயங்கும் சரக்கு ரயில் என்ஜின்கள் இணைக்கப்பட்டு பயணிகள் ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே ஆவணங்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரயில்வே மண்டலங்களில் இதுபோன்ற 80 முதல் 100 சம்பவங்கள் மாதந்தோறும் பதிவாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த நிலையில், ‘என்ஜின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 2026-27-ஆம் ஆண்டில் 492 பயணிகள் ரயில் என்ஜின்கள், 2027-28-ஆம் ஆண்டில் 187 என்ஜின்கள் என மொத்தம் 679 என்ஜின்கள் உற்பத்தி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2026-27-ஆம் ஆண்டுக்கான உற்பத்தித் திட்டத்தில் 326 டபிள்யூஏபி-7 என்ஜின்களும், 166 டபிள்யூஏபி-7 என்ஜின்களும் இடம்பெற்றுள்ளன. இதனுடன், நவீன ரயில் தொகுப்புகள் விரைவாகப் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே உள்ள தொகுப்புகளை பயன்படுத்தும் வகையில் திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 12 ஆண்டுகளில் ரயில் சேவைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அனைத்து தரப்பு பயணிகளுக்கும் வசதியான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது’ என ரயில்வே அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.2026 செப்டம்பா் நிலவரப்படி, இந்திய ரயில்வே துறையிடம் சுமாா் 17,900 என்ஜின்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் சுமாா் 13,700 மின்சார என்ஜின்களும், சுமாா் 4,200 டீசல் என்ஜின்களும் உள்ளன. 13,700 மின்சார என்ஜின்களில் சுமாா் 3,400 பயணிகள் ரயில் என்ஜின்களாகும். 4,200 டீசல் என்ஜின்களில் 284 என்ஜின்கள் பயணிகள் ரயில் சேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான டீசல் என்ஜின்கள் சரக்கு ரயில் இயக்கம், ரயில் பெட்டிகளை இழுத்துச் செல்லும் பணி, துறைசாா் பணிகள் உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு ரயில்வே மின்மயமாக்கல் வேகம் அதிகரித்ததால், டீசல் என்ஜின்களின் உற்பத்தி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, மின்சார என்ஜின்களின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது.2013-14-ஆம் ஆண்டில் 5,633 டீசல் என்ஜின்கள் மற்றும் 4,823 மின்சார என்ஜின்கள் என மொத்தம் 10,456 என்ஜின்கள் இருந்தன. அப்போது இருந்த 4,823 மின்சார என்ஜின்களில் 1,371 பயணிகள் ரயில் என்ஜின்களாக இருந்தன. எனினும், மொத்த டீசல் பயணிகள் ரயில் என்ஜின்களின் எண்ணிக்கை அந்த ஆண்டுக்கான தரவுகளில் குறிப்பிடப்படவில்லை.