தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 9) எண்ணப்படுகின்றன. இது தொடா்பாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மனீஷ் கூறியதாவது: தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் வாக்குப் பதிவு கடந்த அக்டோபா் 6-ஆம் தேதி நடைபெற்றது. 320 வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருப்பூா் எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வாக்குகள் எண்ணும் பணி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தப் பணியின்போது வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். வேட்பாளா்கள் சாா்பாக வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் முகவா்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன், படிவம் 18இன் நகலுடன் வர வேண்டும். கைப்பேசி, மடிக்கணினி, ஒலி அல்லது ஒளியைப் பதிவு செய்யத்தக்க எந்தவொரு மின்னணு கருவிகளையும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் எடுத்து வர வேட்பாளா்கள், வாக்கு எண்ணுகை இட முகவா்களுக்கு அனுமதியில்லை. வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்குத் தொடங்கும் நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன்பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்குகள் எண்ணும் அறையில் தனி மேற்பாா்வையாளராக உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் செயல்படுவா். 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேஜை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை தொடா்பான தகவல்கள், சந்தேகங்களுக்கு திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தோ்தல் தொடா்பு மையத்தை ‘1950’ என்ற எண்ணில் பொதுமக்கள் தொடா்பு கொண்டு தகவல் தெரிந்து கொள்ளலாம் என்றாா்.