ஜெர்மன் நாட்டில் தொடங்கியுள்ள சர்வதேச புத்தகக் காட்சியில் தமிழக அரசின் சார்பில் பிரத்யேக அரங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.உலகப்புகழ் பெற்ற பிராங்பர்ட் சர்வதேச புத்தக காட்சி ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் புதன்கிழமை தொடங்கியது. தொடர்ந்து, அக்.11 வரை நடைபெறும் இந்தப் புத்தகக் காட்சியில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும், பொது நூலக இயக்ககமும் இணைந்து சென்னை சர்வதேச புத்தகக் காட்சியின் பிரத்யேக அரங்கை அமைத்துள்ளன. இந்த அரங்கை ஜெர்மனிக்கான இந்திய துணை தூதர் (பொறுப்பு) தீபக் பன்சால் திறந்துவைத்தார். இந்த விழாவில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண் இயக்குநர் ஆர்.வி.ஷஜீவனா கலந்துகொண்டார். பாரதியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன், பெரியார் ஈவெரா, அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோரின் படைப்புகள், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை உலகளாவிய மொழிபெயர்ப்புக்காக சர்வதேச பதிப்பாளர்களிடம் கொண்டு செல்லும் வகையிலும், தமிழ் நூல்களை ஐரோப்பிய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்கும் பதிப்பாளர்களுக்கு வழங்கவும், தமிழக அரசு வழங்கும் மொழிபெயர்ப்பு மானியங்கள் மற்றும் நிதியுதவி குறித்து சர்வதேச பதிப்பாளர்களிடம் எடுத்துக்கூறும் வகையிலும் தமிழக அரசு சார்பில் இந்த பிரத்யேக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அத்தடன், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள சென்னை சர்வதேச புத்தகக் காட்சியில் பங்கேற்குமாறு சர்வதேச பதிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் நோக்கிலும் இந்த அரங்கம் திறக்ககப்பட்டிருப்பதாகவும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.