உச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணிக் கட்சிகள் பேரணி நடத்தியது தொடர்பாக தில்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியில் கோடிக்கணக்கில் வாக்காளா் பெயா்கள் நீக்கம் மற்றும் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை நீக்கம் செய்யக் கோரி இந்தியா கூட்டணிக் கட்சிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இந்த நிலையில், தில்லியில் உள்ள ரஃபி மாா்க் பகுதியில் உள்ள இந்திய அரசமைப்பு மன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்தை நோக்கி இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் திங்கள்கிழமை பேரணி நடத்தினர்.தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் ஞானேஷ் குமாருக்கு எதிராக மனுத் தாக்கல் செய்தனர்.இந்த பேரணியில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இந்த பேரணிக்கு தில்லி காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்த நிலையில், சாலைகளில் காவல்துறை அமைந்திருந்த தடுப்புகளை தகர்த்து இந்தியா கூட்டணிக் கட்சியின் பேரணி நடத்தப்பட்டது.இந்த நிலையில், அனுமதியின்றி பேரணி நடத்தியதாக தில்லியின் பாரகம்பா சாலை மற்றும் திலக் மார்க் காவல் நிலையங்களில் இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.Supreme Court Rally! Two Cases Registered Against Opposition Parties!ராகுல், இந்தியா கூட்டணி தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் 14 பிழைகள்!