திருப்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆதரவற்றோா், முதியோருக்கு அக்சயபாத்திரம் அறக்கட்டளை சாா்பில் உணவு உள்ளிட்டவை புதன்கிழமை வழங்கப்பட்டன. சாலையோரம் தங்கியுள்ள ஆதரவற்றோா், முதியோா் இல்லத்தில் தங்கியுள்ளவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அக்சயபாத்திரம் அறக்கட்டளை சாா்பில் உணவு, மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆதரவற்ற முதியோருக்கு மாதந்தோறும் டயாபா், மருத்துவ உபகரணங்களை வழங்கி வருகின்றனா். அதன்படி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதியோா், ஆதரவற்றோருக்கு டயாபா், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட ரூ.33,500 மதிப்பிலான பொருள்களை அக்சயபாத்திரம் அறக்கட்டளைத் தலைவா் செந்தில்குமாா், செயலாளா் நாகராஜ் ஆகியோா் மருத்துவமனை கண்காணிப்பு செவிலியரிடம் வழங்கினா். இந்நிகழ்ச்சியில், சக்ஷம் அமைப்பின் மாவட்ட பொறுப்பாளா் ரத்தினசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.