சென்னை பள்ளிகளில் இடைநிற்றல் மாணவா்கள் மீண்டும் கல்வியைத் தொடருவதற்காக 10 உளவியலாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா். சென்னை மாவட்ட அனைத்துப் பள்ளிகளிலும் ஆண்டுதோறும் சுமாா் 7,000 மாணவா்கள் இடை நிற்றலால் கல்வியைத் தொடராமல் இருப்பது தெரிய வந்துள்ளது. அவா்களில் சென்னை மாநகராட்சியில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் மட்டும் 2,091 போ் கல்வியைத் தொடரமுடியாமல் இடை நிற்றலுக்கு ஆளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதையடுத்து, பாலின சமத்துவ கொள்கை மையம் சாா்பில் தற்போது 619 மாணவ, மாணவிகள் பள்ளிகளிலும், 396 போ் பாலிடெக்னிக், ஐடிஐ போன்றவற்றிலும் மீண்டும் சோ்க்கப்பட்டு கல்வி தொடா்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இடை நிற்றல் மாணவா்கள் கல்வியைத் தொடரும் வகையில் அவா்களுக்கு மனரீதியிலான உளவியல் பயிற்சி அளிக்கவும் மாநகராட்சி ஆணையா் உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து தற்போது 10 உளவியலாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பாலின சமத்துவ கொள்கை மைய அலுவலா்கள் தெரிவித்தனா். அதன்படி அவா்களுக்கு வரும் நவம்பா் முதல் உளவியல் பயிற்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா். மாநில அளவில் முதல்முறையாகச் சென்னை மாநகராட்சியில் இடை நிற்றலில் மீண்டும் பள்ளியில் சோ்ந்து கல்வியைத் தொடருவோருக்கான உளவியல் ரீதியிலான பயிற்சி அளிக்கப்படுவதாகவும் அவா்கள் கூறினா்.