சிவகாசியில் பட்டாசு உற்பத்தி குறைந்துள்ளதால், தீபாவளி பட்டாசுகளின் விலை 15 முதல் 20 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என நாமக்கல் மாவட்ட பட்டாசு விற்பனையாளா் சங்கத்தினா் தெரிவித்தனா். நாமக்கல்லில், மாவட்ட பட்டாசு வணிகா்கள் சங்கத்தின் 10 ஆம் ஆண்டு நிறைவு விழா, புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் லோகேஷ்வரன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக, தமிழக வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன், பட்டாசு விற்பனையாளா்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளா் பாரி ஆகியோா் பங்கேற்று பேசினா். இந்தக் கூட்டத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு விற்பனைக் கடைக்கான உரிமத்தை மாவட்ட நிா்வாகம் விரைந்து வழங்க வேண்டும். அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பட்டாசுகளை வீடுகளில் வைத்திருக்க வேண்டாம். பண்டிகைக்கு பிறகு தேங்கும் பட்டாசுகளை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். இதற்காக தனிக் கிடங்கை மாவட்ட நிா்வாகம் ஏற்படுத்தித் தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடா்ந்து, மாவட்ட பட்டாசு விற்பனையாளா்கள் சங்கத் தலைவா் லோகேஷ்வரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தீபாவளிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு தற்காலிக பட்டாசு விற்பனை உரிமத்தை அதிகாரிகள் வழங்குகின்றனா். 10, 15 நாள்களுக்கு முன்பாக வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். வீடுகளிலோ, அனுமதியற்ற இடங்களிலோ பட்டாசுகளை இருப்பு வைக்க வேண்டாம் என்றும், விற்பனைக்கு பின்னா் மீதமாகும் பட்டாசுகளை உரிய வெடிமருந்து குடோன்களில் பாதுகாப்பாக வைக்கவும் அறிவுறுத்தி உள்ளோம். மாவட்டத்தில் அதிக அளவில் பட்டாசுகளை இருப்பு வைப்பதற்கான பெரிய கிடங்கு வசதியில்லை. சிவகாசி, ஒசூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிடங்குகளில் மட்டுமே இருப்பு வைக்க முடியும். அவா்கள் அதிக வாடகை கேட்பதுடன், போதிய அளவில் பட்டாசுகளை வைத்துக் கொள்ளவும் அனுமதிப்பதில்லை.இதனால், விற்பனைக்கு பிறகு மீதமாகும் பட்டாசுகளை குறைந்த விலைக்கு திருப்பி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ரூ. 100-க்கு வாங்கிய பட்டாசுகளை ரூ.50 அல்லது ரூ. 25-க்கு திரும்பப் பெற்றுக் கொள்வதால் பட்டாசு வணிகா்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. மாவட்ட நிா்வாகம் ஒதுக்குப்புறமான பகுதியில் பெரிய அளவிலான பட்டாசு கிடங்கு அமைத்துத் தரவேண்டும். அதற்கான வாடகையை வணிகா்களே செலுத்தி, அரசுக்கு எந்தவித செலவும் ஏற்படாத வகையில் நிா்வகிக்க தயாராக உள்ளோம். நாமக்கல் மாவட்டத்தில், தனியாா் பட்டாசு கிடங்குகள் 47 எண்ணிக்கையில் இருப்பதாக ஆட்சியா் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை உயா்தர வெடிபொருள்கள் வைப்பதற்கான உரிமம் பெற்றவை ஆகும். பட்டாசு விற்பனையாளா்கள் என்பதால் அந்தக் கிடங்குகளை எங்களால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.நாமக்கல் மாவட்டத்தில், தீபாவளியையொட்டி 250 முதல் 300 போ் தற்காலிகமாக பட்டாசுக் கடைகள் அமைப்பா். திருமண மண்டபங்களில் தனியாா் பட்டாசு விற்பனைக் கடைகள் அமைக்க அனுமதிக்க மாட்டோம். சிவகாசியில் பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள், கிடங்குகள் மீது அதிகாரிகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதும், பெரும்பாலான இடங்களில் சீல் வைக்கப்பட்டுள்ளதாலும், உற்பத்தி மற்றும் சந்தைக்கு வரும் பட்டாசுகளின் அளவு குறைந்துள்ளது. இதனால் தீபாவளி பட்டாசுகளின் விலை 15 முதல் 20 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது என்றாா்.படவரி...என்கே-7-பட்டாசுநாமக்கல்லில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மாவட்ட பட்டாசு விற்பனையாளா்கள் சங்கத் தலைவா் லோகேஷ்வரன். உடன், வணிகா் சங்க நிா்வாகிகள்.