சேலம் தளவாய்ப்பட்டி பகுதியில் உள்ள இ.பி.எஃப். அலுவலகத்தில் போலி வங்கி கணக்குப் புத்தகங்களைப் பயன்படுத்தி ரூ. 37.45 லட்சம் இ.பி.எஃப். பணம் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் செயல்பட்டு வரும் எஸ்.எஸ்.பி.இ. காட்டன் மில்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி பின்னா் பணியைவிட்டுச் சென்ற 85 தொழிலாளா்கள், கடந்த 2017-18 காலகட்டத்தில் இ.பி.எஃப். பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பித்துள்ளனா்.இந்த விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட்டிருந்த வங்கி கணக்குப் புத்தகங்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் சரிபாா்க்கப்பட்டு பணம் விடுவிக்கப்பட்டுள்ளது. பின்னா், அந்த விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட்டிருந்த வங்கி கணக்குப் புத்தகங்கள் போலியானவை என்பது தெரியவந்தது. முன்னதாக, இ.பி.எஃப். கணக்குகளில் இருந்து மொத்தம் ரூ. 37,45,103 பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு நெப்ட் மூலம் மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட நிறுவன நிா்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் முழுத் தொகையும் பின்னா் அவா்களால் திருப்பிச் செலுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த மோசடியில் இ.பி.எஃப். அலுவலக ஊழியா்களுக்கும் தொடா்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என இ.பி.எஃப். அமலாக்க அதிகாரி சரவணகுமாா் போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.இதையடுத்து இரும்பாலை போலீஸாா், எஸ்.எஸ்.பி.இ. காட்டன் மில்ஸ் நிா்வாக இயக்குநா் சுப்பிரமணியன், மேலாளா் பாஸ்கா் ஆகியோா் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், இ.பி.எஃப். அலுவலகத்தில் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியா்களின் பங்கு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.