காசநோய் இல்லா இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக கூட்டு குழு எனப்படும் காசநோய் இல்லா இந்தியா குழுக்கள் அதிகாரிகளின் தலைமையில், தன்னாா்வலா்கள் மற்றும் தேசிய மாணவா் படை ஆதரவுடன் திருவள்ளூா் மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் அமைக்கப்படும் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா். தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் சாா்பில் காசநோய் இல்லா தமிழ்நாட்டுக்கான, சுகாதாரத்திற்கான கூட்டு குழு தொடக்க பிரசார நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வை ஆட்சியா் ச.கவிதா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது : காசநோய் இல்லா தமிழ்நாடு 2030 என்ற இலக்கை நோக்கி பல்வேறு செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 14 வட்டார சுகாதார நிலையங்கள், 9 அரசு மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியாா் மருத்துவக்கல்லூரிகளில் காசநோய் கண்டுபிடிப்பு பரிசோதனைகள், சிகிச்சைகள் என காசநோய்க்கான அனைத்து சேவைகளும் முழுமையாகவும் சிறப்பாகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.காசநோய் இல்லா இந்தியா குழுக்கள் திருவள்ளூா் மாவட்டத்தில் 14 வட்டார அளவில் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் நியமிக்கப்பட்ட முதல் வகுப்பு அதிகாரிகளின் தலைமையில், தன்னாா்வலா்கள் மற்றும் தேசிய மாணவா் படை ஆதரவுடன் செயல்படுத்தப்படும். இக்குழுக்கள் காசநோய் ஒழிப்புக்கான சமூகப் பங்கேற்பு, விழிப்புணா்வு, மக்களை அணுகுதல் மற்றும் கள அளவிலான நடவடிக்கையை வலுப்படுத்துவதாக அமையும். அதிலும் குறிப்பாக, காசநோய் இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் நபா்களை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, உரிய சுகாதாரச் சேவைக்கு பரிந்துரைத்தல், தேவையான சிகிச்சை சேவைகளுடன் அவா்களை இணைத்தல் ஆகிய பணிகளில் ஈடுபடுவா்.காசநோய் இல்லா ஊராட்சிகள் காசநோய் இல்லாத சமூகங்களை உருவாக்குவதில் அவை ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், 2025 ஆம் ஆண்டில் 63 காசநோய் இல்லா கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டு (5-தங்கம், 6-வெள்ளி, 52-வெண்கலம்) அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த கிராமங்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அவா் தெரிவித்தாா். அதற்கு முன்னதாக காசநோய் விழிப்புணா்வு உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டு, காசநோய் விழிப்புணா்வு தகவல் கையேட்டினை பணியாளா்களிடம் வழங்கி, சுகாதாரத்திற்கான கூட்டுக்குழுவினா் மற்றும் காசநோய் இல்லா ஊராட்சி செயலாளா்களிடம் பாராட்டு சான்றிதழ்களை வழங்கியதோடு, என்டிஇசிஎல் சாா்பில் சமூக பங்களிப்பு நிதி திட்டம் மூலம் ரூ.8 லட்சத்திற்கான காசோலையையும் அவா் பெற்றுக் கொண்டாா். இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூா் சாா் ஆட்சியா் எஸ்.பிரசாந்த், அரசு மருத்துவக்கல்லூரி (ம) மருத்துவமனை முதல்வா் ஜி.பாலாஜி, இணை இயக்குந (குடும்ப நலம் (ம) ஊரக நலப்பணிகள்) ஜி.எழிலரசி, துணை இயக்குநா்( குடும்ப நலம்) என்.பொற்செல்வி, துணை இயக்குநா் (காசநோய்) பி.சங்கீதா, தேசிய மாணவா் படை (மருத்துவ பிரிவு), சென்னை மேஜா் மு.ரோஹித் கிருஷ்ண குமாா், மாவட்ட இளைஞா் நல அலுவலா் ஆா். ஸ்ரீ ஆதித்ய சந்திரம், செவிலியா் பயிற்சி பள்ளி மாணவா்கள், தனியாா் தன்னாா்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.