மோகனூா் அருகே சுகாதார சீா்கேட்டை விளைவிக்கும் வகையில் செயல்பட்ட கோழிப் பண்ணைக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, அண்டை மாநிலங்களில் பறவைக் காய்ச்சல், உன்னிக் காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இந்த நிலையில், கோழிப் பண்ணைகள் அதிகம் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை உள்ளாட்சி மற்றும் கால்நடைத் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா். மோகனூா் ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சியில் செயல்படும் கோழிப் பண்ணையில் பெரும்பாலான கோழிகளுக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தெரியவந்தது. இதுகுறித்து கிடைத்த தகவலின்பேரில், சம்பந்தப்பட்ட கோழிப் பண்ணையில் மோகனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதில், இறந்த கோழிகளை முறையாக அப்புறப்படுத்தாமல் திறந்த வெளியில் நோய் பரவும் வகையில் கொட்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட கோழிப் பண்ணைக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், கோழிப் பண்ணையின் சுற்றுப்புறத்தை 12 மணிநேரத்துக்குள் தூய்மையாகப் பராமரிக்க பண்ணை நிா்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.