அமெரிக்காவில் உள்ள எட்டு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, "கிரீன் கார்டு' தொடர்பாகப் புதிய நிபந்தனைகளை விதித்திருக்கிறது அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகம். அதன்மூலம் அந்த நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கும், பணிபுரியத் துடிக்கும் இந்திய இளைஞர்களுக்கும் மிகப் பெரிய சோதனையை ஏற்படுத்தி இருக்கிறது.ஹெச்-1 பி விசாவில் அமெரிக்காவில் பணிபுரிபவர்கள், குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு தாய்நாடு திரும்பியாக வேண்டும். அமெரிக்காவில் பணிபுரிய விழையும் இந்திய இளைஞர்களுக்கு "கிரீன் கார்டு' என்பது வெறும் அடையாளமல்ல; அவர்களுக்கு அமெரிக்க வாழ்க்கைக்கான அடிப்படை."பெர்ம்' எனப்படும், நிரந்தரமாக அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கான லேபர் சர்டிபிகேஷன் புரோகிராமில் காணப்பட்ட சில முறைகேடுகளைக் காரணம் காட்டி டிரம்ப் நிர்வாகம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.இது அந்தத் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் இந்திய இளைஞர்களை மனச் சோர்வடையச் செய்வது ஒருபுறம் இருக்கட்டும். முக்கியமான பணித் திட்டங்களில் (ப்ராஜெக்ட்ஸ்) தொடர்ந்து பணியாற்ற திறமைசாலிகளை அவ்வப்போது தேட முடியாமல், அந்த நிறுவனங்கள் திணறக்கூடும். பின்னடைவுகளைச் சந்திக்கவும் நேரலாம். மிகப் பெரிய நிறுவனங்களைக் குறிவைத்து அறிவுறுத்தப்பட்டிருக்கும் புதிய விதிமுறைகள், சிறிய நிறுவனங்களைப் பாதிக்காது என்று கூறப்படுகிறது.இதுபோல "விசா' தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்வது, அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியத் தொழில்நுட்பத் துறையினருக்குப் புதிதல்ல. 2008-இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போதும், 2018-19-இல் "விசா' நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டபோதும் இது போன்ற சவால்களை இந்தியத் தொழில்நுட்பத் துறையினர் எதிர்கொண்டனர். அப்போது மிக சாதுர்யமாக இந்தியா அந்த நெருக்கடியை எதிர்கொண்டது.அமெரிக்காவில் "டெலிவரி சென்டர்கள்' நிறுவப்பட்டன; அந்தத் தொழில்நுட்ப நிறுவனங்கள் கனடா, மெக்ஸிகோ, ஐரோப்பா என்று தங்களது செயல்பாடுகளை விரிவுபடுத்தி, அங்கே இந்தியத் தொழில்நுட்பத் துறையினரைப் பணியமர்த்த முற்பட்டன.இப்படியொரு அச்சுறுத்தல் வரக்கூடும் என்று நரேந்திர மோடி அரசு எதிர்பார்த்து சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. பல நாடுகளுடன் ஏற்படுத்திக் கொள்ளும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில், இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான வேலைவாய்ப்புகளையும், குடியுரிமை தொடர்பான உறுதிமொழியையும் இணைப்பதன் காரணம் இதுவாக இருக்கலாம்.இந்தியாவில் படித்துப் பட்டம் பெறும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அமெரிக்காவை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இருக்கும் நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அமெரிக்க "கிரீன் கார்டு' போல, ஐரோப்பிய யூனியனின் "ப்ளூ கார்டு', பிரிட்டனின் "குளோபல் டேலன்ட் விசா', கனடாவின் "எக்ஸ்பிரஸ் என்ட்ரி' உள்ளிட்டவையும், வருங்காலத்தை வளமாக்கும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.ஹெச்-1பி விசா தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்கிற டிரம்ப் நிர்வாகத்தின் குற்றச்சாட்டை நிராகரித்துவிடவும் முடியாது. அமெரிக்காவிலுள்ள பல நிறுவனங்கள், குறைந்த ஊதியத்துக்குத் தொழிலாளர்களை ஹெச்-1பி விசாவின் மூலம் இறக்குமதி செய்து, அமெரிக்கத் தொழிலாளர்களின் ஊதியத்தைக் குறைக்க முற்படுகின்றன. அந்த நிறுவனங்கள் தண்டிக்கப்பட வேண்டியவை என்பதை மறுக்க இயலாது.ஆனால், மைக்ரோசாஃப்ட், அடோப், கேப்ஜெமினி மட்டுமல்ல, ஐந்து முக்கியமான தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் நிரந்தரத் தொழிலாளர்கள் சான்றிதழ் திட்டத்துக்குத் (பெர்ம்) தடை விதித்திருக்கிறது நிர்வாகம். இந்த நிறுவனங்கள் குறைந்த ஊதியத்தைப் பெறும் தொழிலாளர்களைப் பணி அமர்த்துபவை அல்ல. மாறாக, உலகின் மிகச் சிறந்த திறமைசாலிகளைத் தேடிப்பிடித்து அதிக ஊதியம் கொடுத்துப் புதிய ஆய்வுகளை முன்னெடுப்பவை.அமெரிக்காவின் புதிய குடியேற்றம் குறித்த பிரச்னையால் பத்து லட்சத்துக்கும் அதிகமான இந்தியக் குடும்பங்கள் பரிதவிப்பில் இருக்கின்றன. வேறு வேலை தேட முயன்றால், தங்களது அமெரிக்க வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. சொந்தமாக அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களை ஏற்படுத்த நினைக்கும் திறமைசாலிகள், தயக்கத்தால் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்.லட்சக்கணக்கான இந்தியர்களின் "அமெரிக்கக் கனவு' பொய்க்கும்போது, அவர்களை வரவேற்று திறமையைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைக்கும். தங்களது அனுபவத்தையும், தொடர்புகளையும் பயன்படுத்தித் தாய் மண்ணில் சொந்த நிறுவனங்களை அவர்கள் நிறுவ முடியும். இல்லையென்றால், அவர்கள் அமெரிக்காவில் பணிபுரியும் நிறுவனங்களின் இந்தியப் பிரிவின் முதன்மைப் பொறுப்புகளில் செயல்பட முடியும்.அமெரிக்காவின் இழப்பு வெறும் வெளிநாட்டுப் பொறியியல் பட்டதாரிகளாக மட்டும் இருக்காது. அவர்களால் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் நிறுவனங்களும், கண்டுபிடிப்புகளும், அதிக அளவிலான வரிவருவாயும்கூட என்பதை அதிபர் டிரம்ப்பும், அவரது ஆலோசகர்களும் மறந்து விடுகிறார்கள்.கரப்பான் பூச்சிகளுக்குப் பயந்து, அருவருப்பால் அமெரிக்கவாழ் தொழில்நுட்ப வல்லுநர்கள் தாயகம் திரும்பாமல் இருந்துவிடக் கூடாது என்பதுதான் கோரிக்கை.ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்ஒருவந்தம் கைத்துஉடை யார்.ஊக்கத்தை உறுதியாகத் தம் கைப்பொருளாக உடையவர், ஆக்கம் (இழந்துவிட்ட காலத்திலும்) இழந்துவிட்டோம் என்று கலங்க மாட்டார்.திருக்குறள் (எண் 593) அதிகாரம்: ஊக்கம் உடைமை