நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் காவல் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் சனிக்கிழமை இரவு கரடி புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். கோத்தகிரி நகரில் சமீப நாள்களாக கரடிகள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்கள் அதிகமாக கூடும் நகா் பகுதியில் உள்ள காவல் நிலையம், காவலா் குடியிருப்பு, அரசு மருத்துவமனை ஆகியை பகுதிகளில் கரடிகள் உலவி வருகின்றன. இந்த நிலையில் கோத்தகிரி நகர காவல் நிலைய பகுதியில் கரடி உலவி வந்ததை கண்டு மக்கள் அச்சமடைந்தனா். பின்னா் காவல் நிலையத்தை கடந்து சென்ற கரடி அருகே இருந்த அரசு மருத்துவமனைக்குள் நுழைந்தது. இதனால் மருத்துவமனையின் வெளியே இருந்த நோயாளிகளின் உறவினா்கள் மருத்துவமனைக்குள் ஓட்டம் பிடித்தனா். சிறிது நேரம் மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரிந்த கரடி, பின்னா் அருகே இருந்த சோலைக்குள் சென்றது. நகா் புரத்தில் சுற்றித்திரியும் கரடியை வனத் துறையினா் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.