தேவை உண்மை மட்டுமே!

Wait 5 sec.

ஹரீஸ் காரேவெகு காலத்துக்கு முன்பு வரை, செய்தித்தாள்கள் தங்களின் நம்பகத்தன்மையைப் பெரிதும் போற்றி வந்தன; பத்திரிகையாளர்கள் தங்கள் பெயர் குறிப்பிடப்படுவதை மதிப்பாகக் கருதினர். ஒரு செய்திக்கு முரண்பாடு ஏற்பட்டால், அது சற்றும் ஏற்புடைய விஷயமல்ல என்றே கருதப்பட்டது. அப்போதெல்லாம் தொழில்முறையாகப் பின்பற்றப்பட்ட ஒரே இதழியல், உண்மை நிறைந்த இதழியல் மட்டுமே. செய்திகளை உண்மையின் அடிப்படையிலும், பாரபட்சமின்றியும் எழுத வேண்டும் என்பதே செய்தியாளர்களுக்கான ஆசிரியர்களின் பிரதான அறிவுரையாக இருந்தது. ஒவ்வொரு செய்தி நிறுவனமும், செய்தியாளரின் செய்தியைக் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தும் உள்ளக ஏற்பாட்டையும் கொண்டிருந்தது. உண்மையுள்ள இதழியலுக்கான அர்ப்பணிப்பின் அந்தக் காலம், தற்போதைய கட்சி சார்புடைய காலங்களில் அப்பாவித்தனமான கனவுபோல் தோன்றுகிறது. இப்போதும் உண்மையான இதழியல் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால், உண்மை இல்லாவிட்டால் இதழியல் கிடையாது என்பதை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது. இன்று உலகில் பகுத்தறிவு சார்ந்த தர்க்கத்தையோ, நேர்மையையோ பயன்படுத்துவதற்குப் பதிலாக மக்களின் உணர்வுகள், அச்சங்கள், தவறான எண்ணங்கள், அதீத ஆர்வத்தைத் தூண்டுவதன் மூலம் அதிகாரம் மற்றும் புகழை அடையும் அரசியல் தலைவர்கள், உண்மையைப் பேசத் துணியும் ஒரு செய்தி நிறுவனத்தைத் தண்டிக்கும் அதிகாரத்தையும் தாங்களே எடுத்துக்கொண்டுள்ளனர். இன்று வெள்ளை மாளிகையில், வாஷிங்டன் பத்திரிகையாளர் குழுக்களுடன் கடும் 'போரை' தொடுத்துவரும் ஒரு மனிதர் அமர்ந்திருக்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் மூன்று செய்தி நிறுவனங்களை வெள்ளை மாளிகையின் பத்திரிகையாளர் அறைக்குள் நுழைய விடாமல் தடுக்க முயன்றார். உலகுக்கே ஜனநாயகத்தையும், அதன் நெறிமுறைகளையும் போதிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டும் ஓர் அரசியல் அமைப்பு முறையில்தான் இது நடந்தது. இதைவிட மோசமானது என்னவெனில், ஊடகங்கள் உடனான டிரம்ப்பின் முடிவில்லாத மோதல்களும், சமூக ஊடகங்களில் அவர் இடைவிடாமல் பதிவிடும் அரைகுறை உண்மைகளும்- அப்பட்டமான பொய்களும், புனைவில் இருந்து உண்மையைப் பிரித்தறியும் அமெரிக்கக் குடிமக்களின் திறனை மழுங்கடித்துவிட்டன. செய்தி நிறுவனங்களுக்கு எதிரான அதிபரின் இந்தப் போர் தடையின்றித் தொடர்வதால், பொதுமக்கள் மனதளவில் சோர்வடைந்து, நிகழ்வுகளையும், நகர்வுகளையும் சமநிலையுடன் நோக்கும் முயற்சியைக் கைவிட்டுள்ளனர். இருப்பினும், 'சுதந்திரமான சமூகங்களில்' உள்ள அரசியல் வர்க்கமானது, செய்தி நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்களை கசப்பான மோதல்களுக்குத் தூண்டுவது வருந்தத்தக்க உண்மையாகும். ஒரு பத்திரிகையாளர் தனது பணியை நேர்மையுடன் செய்யும் பணி மிகவும் சிக்கலாகிவிட்டது. ஏனெனில், அதிகார வர்த்தகத்தினர் அது அரசியல்வாதியோ, பெருநிறுவன அதிபரோ, கலாசார தலைவரோ, தாதா கும்பலின் தலைவரோ, தங்களுக்கு எதிரான உண்மையை வெளிக்கொணரும் செய்தியை வெளியிடுவதில் இருந்து செய்தியாளரைத் தடுக்கவும், நிறுத்தவும் பரந்த வளங்கள் மற்றும் 'திறமையை' பயன்படுத்துகின்றனர்.பத்திரிகைத் துறைக்கு எதிராக கணக்கீடுகள் திணிக்கப்படும் இது போன்ற சூழலில், பத்திரிகைத் துறை என்றால் என்ன என்பதை நினைவுகூர்வது மேலும் அவசியமாகிறது. பத்திரிகைத் துறை என்பது ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் கொள்கை சார்ந்த தொழில், அதன் முதன்மையான கடமை சமூகத்துக்கும், பொதுமக்களுக்கும் சேவை செய்வதாகும். அது கோட்பாடற்ற அதிகாரத்துக்கான உரிமம் அல்ல. எந்தவொரு அரசியல் பிரிவிலோ அல்லது கட்சியிலோ தன்னை இணைத்துக் கொள்ள அனுமதிக்கும் எந்தவொரு பத்திரிகை துறையும், உண்மையைத் தீவிரமாகத் தேடுவதில் இருந்து நிச்சயம் விலகிச் செல்கிறது.உண்மைக்கு ஒருமித்த வரையறை எதுவும் இல்லை என்பதும் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயம். இது குறித்து தத்துவஞானிகள் பல நூற்றாண்டுகளாக விவாதித்து வருகின்றனர். ஒரு 'செய்தி' உண்மையான செய்தியறிக்கையா அல்லது ஒரு சுயநலக் குழுவால் 'திட்டமிடப்பட்டதா' என்பதில் நேர்மையான, தொழில்முறை ஆசிரியர்களிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு எழுகிறது. எந்தவொரு பத்திரிகையாளராலும் ஒரு 'செய்தியின்' ஒவ்வொரு அம்சத்தையும் அறிந்து செய்தியாக வெளியிட முடியாது. இதை உண்மையான இதழியல் அல்ல என்று புறந்தள்ளிவிட முடியாது. பெரும்பாலும், மக்களைத் தூண்டிவிடுபவர் 'நடுநிலையான பத்திரிகைத் துறை' என்ற கருத்தாக்கத்தை பயன்படுத்துகிறார். நடுநிலைத்தன்மைக்கான இந்தக் கூக்குரல், பெரும்பாலும் உண்மையான பத்திரிகைத் துறையை சிக்கவைக்கும் பொறியாக மாறிவிடுகிறது. நடுநிலைமை என்பது ஒரு கொள்கையாக விரும்பத்தக்கதாக இருந்தாலும், அது இறுதியில் உண்மைத் தன்மை வாய்ந்த செய்தியறிக்கையை ஊக்கமிழக்கச் செய்துவிடுகிறது.பழைமையான இதழியலின் அறியப்பட்ட நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டு செயல்படும் சமூக ஊடகங்களின் யுகத்துக்குள் நாம் நுழையும் இந்த வேளையில், ஒரு செய்தியைத் தெரிவிப்பதற்கான தொழில்நுட்ப ஊடகம் எதுவாக இருந்தாலும், ஒரு பத்திரிகையாளர் தனது கட்டுரையை முடிந்தவரை திறமையாகவும் பாரபட்சமின்றியும் கூறக் கடமைப்பட்டுள்ளார் என்பதை மீண்டும் வலியுறுத்துவது மிகவும் அவசியமாகும். ஏனெனில், இறுதியில் 'இதழியல் பணியாற்றுகிறேன்' என்று கூறிக்கொள்ளும் எவரும், தாம் சமூகத்துக்கு சேவை செய்கிறோம் என்பதை நினைவில் கொண்டு, முடிந்தவரை பல உண்மைகளைச் சொல்ல வேண்டும். இது, மிகவும் அவசியமானது. இதழியலுக்குத் தேவை உண்மை மட்டுமே.