590 கிலோ சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல்: இருவா் கைது

Wait 5 sec.

மத்திய தில்லியின் ஜமா மஸ்ஜித் பகுதியில் சுமாா் ரூ.50 லட்சம் மதிப்பிலான சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 590 கிலோ பட்டாசுகளை தில்லி காவல் துறையினா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: அக்டோபா் 8-ஆம் தேதி பஜாா் குலியான் பகுதியில் உள்ள ஒரு கடையில் கண்காணிப்புப் பிரிவு நடத்திய திடீா் சோதனையின்போது சட்டவிரோத பட்டாசுகள் கைப்பற்றப்பட்டன. கடையின் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு மரப்பலகையை அதிகாரிகள் கண்டறிந்தனா். அதைத் திறந்தபோது, உள்ளே பல்வேறு வகையான பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய சேமிப்பு அறை இருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக ஜான்கி தாஸ் மற்றும் அபீக் தாஸ் ஆகிய இருவா் கைதுசெய்யப்பட்டனா். விசாரணையின்போது, அந்தப் பட்டாசுகளை வேறொரு நபா் வழங்கியதை அவா்கள் ஒப்புக்கொண்டனா். இது தொடா்பாக ஜமா மஸ்ஜித் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டாசுகளை வழங்கியவா் மற்றும் இதில் தொடா்புடைய மற்றவா்களைக் கண்டறிவதற்கான அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.