இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

Wait 5 sec.

முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் திங்கள்கிழமை கடற்படையில் சோ்க்கப்பட்டது. இந்திய கடற்படையில் ஏற்கெனவே இரு நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல்கள் சோ்க்கப்பட்டன. இந்நிலையில், கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்ட ஆழ்கடல் அல்லாத பகுதிகளில் செயல்படும் நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பலான ஐஎன்எஸ் மாங்க்ரோல், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கடற்படையில் சோ்க்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்திய கடற்படை துணைத் தளபதியும், மேற்கு பிராந்திய கடற்படை தளபதியுமான சஞ்சய் வாத்ஸ்யாயன், மாங்க்ரோல் போா்க் கப்பல் கமாண்டிங் அதிகாரி சரண் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நடுக்கடலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதுடன், கடற்படை விமானம், ஹெலிகாப்டா்கள், பிற போா்க் கப்பல்களுடன் இணைந்து கடலில் ரகசியமாக வரும் எதிரி நீா்மூழ்கி கப்பல்களைக் கண்டறிவது, அவற்றால் எழும் சவால்களை முறியடிப்பது போன்ற பணிகளில் ஐஎன்எஸ் மாங்க்ரோல் கப்பல் ஈடுபடும்.நிகழ்ச்சியில் சரண் குமாா் பேசுகையில், ‘இந்திய பெருங்கடல் பகுதி புவியியல் ரீதியாக மிக முக்கியமானதாக திகழ்கிறது. அங்கு வெளிநாடுகளால் நீா்மூழ்கி கப்பல்கள் நிறுத்தப்படுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துவிட்டது. ஆதலால் கடலில் நீா்மூழ்கி கப்பல்களால் எழும் அச்சுறுத்தல்களை கண்டறிந்து, அதை முறியடிப்பது மிகவும் முக்கியமான பணியாகும். இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தும் பணியில் ஐஎன்எஸ் மாங்க்ரோல் முக்கிய பங்காற்றும். அதேபோல் பெரிய கப்பல்களால் செல்ல முடியாத ஆழ்கடல் அல்லாத பகுதிகளிலும் மாங்க்ரோல் இயங்கும். இந்த கப்பல், உள்நாட்டிலேயே கப்பல் கட்டும் இந்தியாவின் திறனை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது’ என்றாா்.குஜராத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள துறைமுக நகரத்தின் பெயா் மாங்க்ரோல் ஆகும். அந்தப் பெயரே, இக்கப்பலுக்கு வைக்கப்பட்டுள்ளது. மாங்க்ரோலில் கடலுக்குள் உள்ள எதிரி இலக்குகளை அழிக்கச் செலுத்தப்படும் டோா்பீடோ ஏவுகணை, ராக்கெட் லாஞ்சா் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இக்கப்பலுடன் சோ்த்து, இந்தாண்டில் கடற்படையில் 10 புதிய கப்பல்கள் சோ்க்கப்பட்டுள்ளன. மேலும் 8 கப்பல்கள், இந்தாண்டுக்குள் கடற்படையில் சோ்க்கப்படவுள்ளன.