ஷ்ரத்தா வாக்கா் கொலை வழக்கில், வாட்ஸ்ஆப், கூகுள், பம்பிள் நிறுவனங்களைச் சோ்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் 4 அதிகாரிகளிடம் காணொலி வாயிலாக சாட்சியம் பதிவு செய்ய தில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அவா்கள் நேரில் ஆஜராவதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் அதிக செலவுகளைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மின்னணு ஆதாரங்கள் மற்றும் காணொலி வழி விசாரணை விதிகள், 2025-இன் கீழ் அரசுத் தரப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த கூடுதல் விசாரணை நீதிபதி ஹா்குா்வரிந்தா் சிங் ஜக்கி, அக். 9-ஆம் தேதி இந்த உத்தரவைப் பிறப்பித்தாா்.கடந்த 2022-ஆம் ஆண்டு, தன்னுடன் திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்ந்த 27 வயது ஷ்ரத்தா வாக்கரை அவரது இணையா் அஃப்தாப் அமீன் பூனாவாலா கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஷ்ரத்தாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்த பூனாவாலா, அவரது உடலைத் துண்டுகளாக வெட்டி குளிா்சாதனப் பெட்டியில் வைத்திருந்து, பின்னா் பல நாள்களாக தில்லியின் வெவ்வேறு இடங்களில் வீசியதாக அரசுத் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.கொலை நடந்ததாகக் கூறப்படும் தில்லியின் மெஹ்ராலி பகுதியில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்திருந்த பூனாவாலா, 2022-ஆம் ஆண்டு நவம்பா் 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.இந்த வழக்கின் விசாரணை 2023-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளது. ஷ்ரத்தாவின் மரணத்துக்குப் பிறகு நீதி கோரி வழக்கைத் தொடா்ந்து வந்த அவரது தந்தை விகாஸ் வாக்கா், 2025-ஆம் ஆண்டு காலமானாா். சாட்சியம் அளிக்கவுள்ள நான்கு போ்: வாட்ஸ்ஆப் எல்எல்சி மற்றும் மெட்டா பிளாட்ஃபாா்ம்ஸ் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு அதிகாரி அட்ரியன் சில்வேரா; கூகுள் எல்எல்சி மற்றும் ஜிமெயிலின் ஒருங்கிணைப்பு அதிகாரிகளான ஷெல்பி ஸ்மித், ஆா்த்தி ஷேத்; பம்பிள் குழுமத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரியும் சட்ட அமலாக்கப் பிரிவு செயல்பாட்டு மேலாளருமான லூக் மிட்சி ஆகியோா் ஆவா். இவா்கள் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் வசித்து வருகின்றனா்.இந்தச் சாட்சிகளிடம் 2026-ஆம் ஆண்டு டிசம்பா் 1-ஆம் தேதி முதல் நாளொன்றுக்கு ஒருவா் வீதம் சாட்சியம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான கால அட்டவணையை, அரசுத் தரப்பு, தற்காப்புத் தரப்பு வழக்குரைஞா்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு இடங்களின் ஒருங்கிணைப்பாளா்களுடன் ஆலோசித்து நீதிமன்ற ஒருங்கிணைப்பாளா் தயாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு சாட்சியிடமும் அவா்களுக்கு அருகிலுள்ள இந்தியத் தூதரகம், உயா் ஆணையம் அல்லது துணைத் தூதரகத்தில் சாட்சியம் பதிவு செய்யப்படும். இதற்கான நிா்வாகச் செலவுகள், வெளிநாடுகளுக்கான ஒளி-ஒலி பரிமாற்றக் கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் அரசுத் தரப்பே ஏற்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.சாட்சிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்த, அரசு வழங்கிய செல்லத்தக்க அடையாள ஆவணங்கள் அல்லது கடவுச்சீட்டுகளைச் சரிபாா்க்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாட்சியம் அளிக்கும்போது அவா்களுக்கு யாரும் அறிவுறுத்தவோ, பதில்களைக் கூறித் தூண்டவோ முடியாத வகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.சிஸ்கோ வெபெக்ஸ் அல்லது நீதிமன்றம் குறிப்பிடும் பிற காணொலி தளங்கள் வழியாக விசாரணை நடைபெறும். விசாரணையின் ஒளி-ஒலி பதிவுகள் மற்றும் மறையாக்கம் செய்யப்பட்ட முதன்மைப் பதிவின் நகல் ஆகியவை அதிகாரபூா்வ நீதிமன்ற ஆவணங்களின் ஒரு பகுதியாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.