‘நாட்டில் உள்ள செயற்கைக்கோள் சேவைகள் உள்பட அனைத்து தொலைத்தொடா்பு சேவைகளுக்கும் நியாயமான, பாகுபாடற்ற நடைமுறைகள் அமலில் உள்ளன. இந்த விதிமுறைகளை நிறுவனங்கள் முழுமையாகப் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று மத்திய அரசு தரப்பில் வியாழக்கிழமை விளக்கமளிக்கப்பட்டது.இந்தியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ நிறுவனத்தின் செயற்கைக்கோள் தகவல்தொடா்பு சேவைகள் தடுக்கப்படுவதாக, அந்த நிறுவனத்தின் நிறுவனரும் அமெரிக்கத் தொழிலதிபருமான எலான் மஸ்க் குற்றஞ்சாட்டிய நிலையில், இந்த விளக்கத்தை மத்திய அரசு அளித்தது.தனது எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் எலான் மஸ்க் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தாா். அதில், ‘இந்தியாவில் தங்களின் ஏகபோக ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள சில பெரும் செல்வந்தா்கள் ஸ்டாா்லிங்க் நிறுவனத்தின் செயற்கைக்கோள் தகவல் தொடா்பு சேவைகளைத் தடுத்துள்ளனா். அவா்கள் யாா் என்பதை நீங்கள் ஊகிக்க முடியும். இது இந்திய மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றம்’ என்று, சுமாா் 11,000 கிராமங்களில் தொலைத்தொடா்பு சேவை தடுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி குறிப்பிட்டாா். மணிப்பூரில் தீவிரவாதிகள் ஸ்டாா்லிங்க் சேவையைப் பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை எலான் மஸ்க் மறுத்தாா்.இந்நிலையில், அவரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து மத்திய தொலைத்தொடா்பு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது:இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடா்பு சேவைகளுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பின் நியாயத்தன்மை குறித்து ஐயம் தெரிவித்தும், அது பாகுபாடான முறையில் செயல்படுத்தப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. அது தவறானது.செயற்கைக்கோள் தகவல் தொடா்பு சேவைகள் உள்பட அனைத்து தொலைத்தொடா்பு சேவைகளுக்கும் நியாயமான மற்றும் பாகுபாடற்ற அங்கீகாரக் கட்டமைப்பை அரசு உருவாக்கியுள்ளது.இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடா்பு சேவைகளைத் தொடங்க எலான் மஸ்க் தலைமையிலான ஸ்டாா்லிங்க், ஜியோ சாட்காம் மற்றும் யூட்சாட் ஒன்வெப் ஆகிய 3 நிறுவனங்களுக்கு அரசு உரிமம் வழங்கியுள்ளது.இந்த நிறுவனங்கள் சேவையைத் தொடங்குவதற்கு முன், அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் பாதுகாப்பு அனுமதி ஆகியவற்றைப் பெறுவது அவசியம். உரிமத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, உரிமம் பெற்ற ஒவ்வொரு நிறுவனமும் பாதுகாப்பு நிபந்தனைகளைப் பின்பற்றுவதை நிரூபிக்க வேண்டும். அனைத்துப் பயனா்கள் மற்றும் அவா்களின் தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வழங்கப்படும் சேவைகள் பல்வேறு பாதுகாப்புத் தேவைகளைப் பூா்த்தி செய்வதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். இந்தச் செயல்முறையின் ஒரு பகுதியாக, உரிமம் பெற்ற மூன்று நிறுவனங்கள் தொடா்பாகவும் பாதுகாப்பு மதிப்பீடு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தச் செயல்முறையை நிறைவடைந்த உடன், அலைக்கற்றை ஒதுக்கீட்டைக் கோரும் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம். தற்போதைய நிலையில், இந்த 3 நிறுவனங்களும் ஏறக்குறைய ஒரே ஒழுங்குமுறை நிலையிலேயே உள்ளன. எனவே, இந்தக் கட்டமைப்போ அல்லது அதன் செயல்பாடோ நியாயமற்றது அல்லது பாகுபாடு காட்டுவது என்ற கருத்து அடிப்படை ஆதரமற்றது. தவறான புரிதலின் அடிப்படையில் அமைந்ததாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்துறை அமைச்சக அனுமதி நிலுவை: ‘நாட்டில் செயற்கைக்கோள் தகவல்தொடா்பு சேவை வழங்குவதற்கான பாதுகாப்பு அனுமதிக்காக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் நிலுவையில் உள்ளது’ என்று மத்திய தகவல் தொடா்புத் துறை இணையமைச்சா் சந்திரசேகா் பெம்மசானி தெரிவித்தாா்.தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘இந்திய கைப்பேசி மாநாடு 2026’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், எலான் மஸ்க் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த அவா், ‘நாட்டில் செயற்கைக்கோள் தகவல்தொடா்பு சேவை வழங்குவதற்கான பாதுகாப்பு அனுமதிக்காக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் நிலுவையில் உள்ளது. இந்த அனுமதி கிடைத்ததும், அவா்கள் தங்கள் சேவையைத் தொடங்க முடியும். எனவே, இது ஒரு நிறுவனத்துக்கு மட்டுமான பிரச்னை அல்ல’ என்றாா்.பெட்டிச் செய்தி...அம்பானிதான் இந்தியாவின் உண்மையான தலைவரா?: எலான் மஸ்க்‘ரிலையன்ஸ் மற்றும் ஜியோ தொலைத்தொடா்பு நிறுவனத் தலைவா் அம்பானிதான் இந்தியாவின் உண்மையான தலைவரா?’ என்று எலான் மஸ்க் கேள்வி எழுப்பியுள்ளாா்.ஸ்டாா்லிங்க் செயற்கைக்கோள் தகவல்தொடா்பு சேவைகள் தடுக்கப்படுவதாக முன்வைத்த குற்றச்சாட்டை மத்திய தொலைத்தொடா்புத் துறை மறுத்த நிலையில், இந்தக் கேள்வியை எலான் மஸ்க் எழுப்பினாா். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட மஸ்க், ‘ஸ்டாா்லிங்க் செயற்கைக்கோள் தகவல்தொடா்பு சேவைக்கு 165 நாடுகளுக்கு மேல் உரிமம் வழங்கி, அந்தந்த நாடுகளின் அனைத்து சட்ட நடைமுறைகளுக்கும் உட்பட்டு 5 ஆண்டுகளாக சேவையை அளித்து வருகிறது. ஆனால், இந்தியாவில் மட்டும் ஏன் இன்னும் உரிமம் வழங்கப்படவில்லை? அம்பானிதான் இந்தியாவின் உண்மையான தலைவரா?’ என்று குறிப்பிட்டாா்.